பவானிசாகரில் தொடர்ந்து அட்டகாசம் செய்யும் மக்னா யானை: கும்கிகளை பயன்படுத்தி விரட்ட கோரிக்கை

சத்தியமங்கலம்: பவானிசாகர் அணை முன் பகுதியில் உள்ள அனைத்து பூங்கா மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான ஓட்டுனர் பயிற்சி பள்ளி பகுதிகளில் தினமும் இரவில் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையை ஒட்டி உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் மக்னா யானை அணை முன்புறமுள்ள பூங்காவின் காம்பவுண்ட் சுவரை உடைத்து தள்ளியதோடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் பயிற்சி பள்ளியின் முன்புற இரும்பு கேட் மற்றும் காம்பவுண்ட் சுவரை சேதப்படுத்தியது.

இந்த யானை தினமும் இரவில் பவானிசாகர் நகர் பகுதியில் முகாமிட்டு அணை பூங்கா பகுதியில் பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதை அடுத்து இந்த மக்னா யானையை விரட்டுவதற்காக வனத்துறை ஊழியர்கள் ஏழு பேர் கொண்ட குழுவினர் தினமும் இரவில் ரோந்துப் பணி மேற்கொண்டு வருகின்றனர். பவானிசாகர் நகர் பகுதியில் நடமாடும் காட்டு யானை தந்தம் இல்லாத மக்னா யானை என வனத்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் போலீஸ் குடியிருப்பு எதிரில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்து தோட்டத்து வீட்டின் மேற்கூரையை சேதப்படுத்தியது. அப்போது யானை கண்டு ஓடிய விவசாயி சுப்பையன் என்பவர் காயமடைந்தார். தினமும் இரவில் வனத்துறையினர் வந்து சென்றாலும் மக்னா யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

கடும் வறட்சி காலத்தில் காட்டு யானைகள் குடிநீர் மற்றும் தீவனம் தேடி வனப்பகுதி வெளியேறும் சூழ்நிலையில், தற்போது பவானிசாகர் பகுதியில் நல்ல மழை பெய்து வனப்பகுதி பசுமைக்கு திரும்பியுள்ளதால் யானைகளுக்கு குடிநீர் மற்றும் தீவனப் பிரச்சினை தீர்ந்துள்ள நிலையில் காட்டு யானைகள் விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை மரங்களை ருசித்து பழகியதால் தற்போது வனப்பகுதி பசுமைக்கு திரும்பியும், காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் விவசாய பயிர்களை தின்பதிலேயே ஆர்வம் காட்டுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

பவானிசாகர் நகர் பகுதியில் ஊருக்குள் புகுந்து அரசு துறையின் கட்டிடங்களை சேதப்படுத்தி வரும் மக்னா யானையை கும்கி யானைகளை பயன்படுத்தி பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பவானிசாகரில் தொடர்ந்து அட்டகாசம் செய்யும் மக்னா யானை: கும்கிகளை பயன்படுத்தி விரட்ட கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: