நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் 20 கட்சிகள் நாட்டின் முதல் குடிமகனை அவமதிக்கிறதா ஒன்றிய அரசு?

* ஜனாதிபதியை ஆளுநருடன் ஒப்பிடும் பாஜ
* ஜனநாயகம் குறித்து கேள்விகளை அடுக்கும் எதிர்க்கட்சிகள்

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, ஜனநாயக பாதையில் இருந்து விலகுகிறதோ? என்ற கேள்வி கடந்த சில ஆண்டுகளாகவே நம்மில் பலரின் மனதில் அவ்வப்போது எழுவது வாடிக்கையாகிவிட்டது. தற்போது, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா சர்ச்சையால் இந்த கேள்வி இன்றைக்கு நாடு முழுவதும் பேசும் பொருளாகிவிட்டது.

டெல்லியில் தற்போது உள்ள நாடாளுமன்ற கட்டிடம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1927 ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. இந்த கட்டிடத்தில் இட நெருக்கடி, நவீன வசதிகள் இல்லை என்ற குரல் கடந்த பல ஆண்டுகளாகவே எழுந்து வந்தது. அதே நேரம் இது பாரம்பரிய கட்டிடம் என்பதால் இருக்கும் வசதிகளே போதும் என்ற எண்ணமும் ஆட்சியாளர்களிடம் இருந்ததால், புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட முழு மூச்சாக எந்த முயற்சியும் எடுக்கப்படாமல் இருந்தது.

திடீரென 2020ல் இப்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அருகிலேயே பிரமாண்டமாக புதிய கட்டிடம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. கொரோனா உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கைகள் எடுக்காமல் இப்படி வீண் செலவு செய்யலாமா என்று சர்ச்சை எழுந்தது. ஆனால், சர்ச்சைகளை மீறி கட்டுமான பணிகள் நடந்தது. 4 மாடிகள் கொண்ட புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு ₹977 கோடி என மதிப்பிடப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் அதன் செலவு ₹1,250 கோடியாக அதிகரித்தது.

இப்போது கட்டுமான பணிகள் முழுமையடைந்து திறப்பு விழாவுக்கு நாள் குறித்தும் மிகப்பெரிய அரசியல் சட்ட சர்ச்சை வெடித்து உள்ளது. பிரதமர் மோடி மே28ம் தேதி(இன்று) புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைப்பார் என்ற தகவல் கடந்த 18ம் தேதி வெளியாகி அதிர்ச்சியலைகளை அரசியல் வட்டாரங்களில் பரவவிட்டது.

‘இந்தியாவின் முதல் குடிமகன்’ என்று அரசியல் சட்டம் சுட்டிக் காட்டும் ஜனாதிபதிதான் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க தகுதியானவர் என்று எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை காய்ச்சி எடுத்தன. இந்திய அரசியல் சட்டத்தின் 79வது பிரிவில், இந்திய ஒன்றியத்துக்கு நாடாளுமன்றம் அமைய வேண்டும். அதில், ஜனாதிபதி மற்றும் மாநிலங்களவை மற்றும் மக்களவை என இரண்டு அவைகள் உள்ளடங்கியதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி என்பவர் நாட்டின் தலைவர் மட்டுமில்லாமல், நாடாளுமன்றத்தின் முக்கிய அங்கமாக உள்ளார். ஏனென்றால் நாடாளுமன்றத்தை கூட்டி அதில், உரையாற்றுவதும், கூட்டத்தை ஒத்திவைப்பதற்கான அறிவிப்புகளையும் அவர்தான் வெளியிடுவார். ஜனாதிபதி இல்லாமல் நாடாளுமன்றம் செயல்பட முடியாது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டியபோதுதான் ஜனாதிபதியை அழைக்கவில்லை. இப்போதும்அவர் திறந்து வைக்க அனுமதிக்காதது ஜனநாயகத்தின் கறுப்பு நாள் என்று எதிர்க்கட்சிகள் வர்ணித்துள்ளன. விழாவை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 20 கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளன. ஆனால், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை ஒதுக்கிதள்ளிவிட்டு மோடி தான் திறந்து வைப்பார் என்று பாஜவினர மார் தட்டுகின்றனர்.

நாடாளுமன்ற துணை கட்டிடத்தை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், நாடாளுமன்ற நூலக கட்டித்தை பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியும் திறந்து சரியா? அப்போது ஜனாதிபதியை எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லையா? மோடி எதை செய்தாலும் குற்றம் கண்டுபிடிப்பதே எதிர்க்கட்சிகளுக்கு வேலையாகி விட்டது என்று பதிலுக்கு பாஜவினர் சாடியுள்ளனர்.

அதுதான் நீங்களே துணை கட்டிடம், நூலகம் என்று கூறிவிட்டீர்களே, இந்திராவும், ராஜிவும் புதிய நாடாளுமன்றம் கட்டி அவர்களே திறந்தார்களா என்ற பதில் கேள்விக்கு பதிலில்லை. அதற்கு பதிலளிக்காமல், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை கட்டிட திறப்பு விழாக்களில் கவர்னர்களுக்கு பதிலாக பிரதமரோ அல்லது மாநில முதல்வரோ திறந்து வைத்தது சரியா? என்று பாஜ கேள்வியை முன்வைக்கிறது. ஜனாதிபதியும், கவர்னரும் ஒன்றா? அப்படியென்றால் ஜனாதிபதியையும், மாநில கவர்னரையுமை் ஒரே தட்டியில் வைத்து பாஜ பார்க்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜனாதிபதி இந்தியாவின் முதல் குடிமகன். நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரதிநிதிகளான எம்.பி., எம்எல்ஏக்கள் வாக்களித்து தேர்வு செய்யப்படுபவர். அதாவது ஒட்டுமொத்த இந்தியர்களின் பிரதிநிதியாக செயல்படுபவர்.  ஆனால், கவர்னர் என்பவர் யார்? அவர் ஒன்றிய அரசின் சிபாரின் பெயரில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர். அவர் ஒன்றிய அரசின் பிரதிநிதியாகதான் மாநிலத்தில் செயல்படுகிறார். அவரை மக்களோ, மக்கள் பிரதிநிதிகளோ தேர்வு செய்வதில்லை. வேண்டாத எதிர்க்கட்சி மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்க அனுப்பப்படுபவர். இப்படி ஒன்றிய அரசின் ஏவலாளியாக செயல்படும் கவர்னரும், ஜனாதிபதியும் ஒன்றா என்பதை பாஜவினர்தான் விளக்க வேண்டும்.

அதேபோல், கவர்னரை ஜனாதிபதி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் டிஸ்மிஸ் செய்யலாம். அப்படி, ஜனாதிபதியை டிஸ்மிஸ் செய்ய முடியுமா? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பாஜவிடம் பதில் இல்லை. இன்றைக்கு ஜனாதிபதியாக இருப்பவர் திரவுபதி முர்மு. பழங்குடியினத்தில் இருந்து ஜனாபதியான முதல் இந்தியர். பழங்குடியின பெண்ணை ஜனாதிபதி ஆக்கிவிட்டோம் என்ற பெருமை பேசிய பாஜவினரே இன்று அவரையும், ஜனாதிபதி பதவியையும் சிறுமைப்படுத்துகின்றனர்.

எதற்கெடுத்தாலும் மோடியை முன்நிறுத்த வேண்டும் என்ற வேகத்தில், அரசியல் சட்ட ஆளுமைகளை சிறுமை படுத்தும் வகையில் பாஜ அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் எல்லாமே மோடிதான் என்று காட்சிபடுத்தி வாக்குகளை அறுவடை செய்வது பாஜவின் திட்டம். இந்த திட்டத்துக்கு எதிராக யார் இருந்தாலும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவர்கள் ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்பது 2014க்கு பிறகு இந்தியாவில் எழுதப்படாத சட்டம். ஜனநாயகம், அரசியல் சட்ட நடைமுறை, மரபு எல்லாவற்றையும் குழி தோண்டி புதைத்து, மாபெரும் வரலாற்று பிழையை பாஜ செய்கிறது என்பதை காலம் அவர்களுக்கு உணர்த்தும்.

* நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரதிநிதிகளான எம்.பி.,எம்எல்ஏக்கள் வாக்களித்து ஜனாதிபதி தேர்வு செய்யப்படுபவர். ஜனாதிபதி ஒட்டுமொத்த இந்தியர்களின் பிரதிநிதியாக செயல்படுபவர்.
* கவர்னர் என்பவர் யார்?
அவர் ஒன்றிய அரசின் சிபாரின் பெயரில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர்.
* கவர்னரை ஜனாதிபதி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் டிஸ்மிஸ் செய்யலாம். அப்படி, ஜனாதிபதியை டிஸ்மிஸ் செய்ய முடியுமா?
* பழங்குடியின பெண்ணை ஜனாதிபதி ஆக்கிவிட்டோம் என்ற பெருமை பேசிய பாஜவினரே இன்று அவரையும், ஜனாதிபதி பதவியையும் சிறுமைப்படுத்துகின்றனர்.

1920களில் மொத்த செலவே ₹83 லட்சம்தான்

புதுடெல்லியை வடிவமைத்த இங்கிலாந்து கட்டிடக் கலை வல்லுனர்களான எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேகர் ஆகியோர் நாடாளுமன்ற கட்டிடத்தையும் வடிவமைத்தனர். இவ்வளாகத்தின் கட்டுமானத்திற்கான அடிக்கல் 1921ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி நாட்டப்பட்டது. ஆறு வருடங்களில், ₹83 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தை அப்போதைய வைசிராயும் இந்தியத் தலைமை ஆளுநருமான இர்வின் பிரபு, 1927ம் ஆண்டு ஜனவரி 18ல் திறந்து வைத்தார். ஜனவரி 19, 1927 அன்று மத்திய சட்டமன்ற அவையின் மூன்றாவது அமர்வு இவ்வளாகத்தில் கூட்டப்பட்டது.

தொடக்கத்தில் இருந்து சர்ச்சைதான்

புதிய நாடாளுமன்றம் கட்டிடம் தொடக்கம் முதலே பல சரச்சைகளை சந்தித்து வருகிறது. அதன் விவரம்

புதிய நாடாளுமன்ற கட்டுமானம் பற்றி நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடைபெறவில்லை.

ஆக்ரோஷமாக மாறிய அமைதியான சிங்கம்?

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு மேலே இந்தியாவின் தேசிய சின்னமான நான்கு சிங்கங்கள் கொண்ட அசோகர் முத்திரையின் வெண்கல சிலை வைக்கபடுகிறது. இதை கடந்த 2022ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். வட்ட தட்டில் நான்கு சிங்கங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து நிற்கும் சிலை அது. கி.மு. 250ம் ஆண்டை சேர்ந்த அசோகர் கால சிங்க முத்திரையில் இருந்த சிங்கங்கள் அமைதியாக காட்சியளித்தன. ஆனால், மோடி திறந்து வைத்த சிலையில் உள்ள சிங்கங்கள் ஆக்ரோஷமாக காட்சி அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

The post நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் 20 கட்சிகள் நாட்டின் முதல் குடிமகனை அவமதிக்கிறதா ஒன்றிய அரசு? appeared first on Dinakaran.

Related Stories: