நாட்டின் பொருளாதாரத்தை ஒன்றிய பாஜ அரசு படுகுழியில் தள்ளிவிட்டது: காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் ராஜீவ் கவுடா குற்றச்சாட்டு

சென்னை: 9 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு துறைகளில் தோல்விகள் சந்தித்ததன் மூலம், நாட்டின் பொருளாதாரத்தை ஒன்றிய பாஜ அரசு படுகுழியில் தள்ளிவிட்டது என்று காங்., தேசிய செய்தி தொடர்பாளர் ராஜீவ் கவுடா குற்றம்சாட்டியுள்ளார். சென்னை சத்தியமூர்த்திபவனுக்கு அகில இந்திய காங்கிரஸ் ஆராய்ச்சித் துறை தலைவரும், தேசிய செய்தித் தொடர்பாளருமான ராஜீவ் கவுடா வந்தார். அப்போது, அவருக்கு மாநில துணை தலைவர் கோபண்ணா, தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஜெயக்குமார் எம்பி, மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், முத்தழகன், அடையார் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து, ராஜீவ் கவுடா நிருபர்களிடம் கூறியதாவது: மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ அரசு ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்த 9 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் ஒன்றிய அரசு தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் விலைவாசி உயர்வும், வேலையின்மையும் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து இருக்கிறது. ஏழைகளின் கூலி குறைந்துள்ள நிலையில், வேலையின்மையும் 30-40 சதவீதம் அதிகரித்துள்ளது. மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கையால் சிறு தொழில்கள் அழிந்தன.

விவசாயத்தை தாரை வார்க்கும் மோடியின் முயற்சி விவசாயிகளின் மாபெரும் போராட்டத்தால் முறியடிக்கப்பட்டது. பெண்கள், தலித்துகள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து மவுனம் காக்கிறார். கடந்த 9 ஆண்டுகளில், எதிர்க்கட்சிகள் மற்றும் தலைவர்களை பழிவாங்கும் அரசியலை தான் பாஜ செய்கிறது. அருணாச்சல பிரதேசம், கோவா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை மிருக பலத்தையும், பண பலத்தையும் பயன்படுத்தி கவிழ்த்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post நாட்டின் பொருளாதாரத்தை ஒன்றிய பாஜ அரசு படுகுழியில் தள்ளிவிட்டது: காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் ராஜீவ் கவுடா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: