விடுமுறை நாளையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் : மெயினருவியில் கூட்டம் அலைமோதியது

பென்னாகரம் : காந்தி ஜெயந்தி விடுமுறை, காலாண்டு தேர்வு விடுமுறை நிறைவால், ஒகேனக்கல்லில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பரிசல் துறையிலும், மெயினருவியிலும் கூட்டம் அலைமோதியது. இளைஞர்களும், பெண்களும் காவிரி ஆற்றில் உற்சாகமாக குளியல் போட்டனர். கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீரால், 2 மாதங்களுக்கு முன் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலாத்தலம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. சுற்றுலா பயணிகள் வரத்து அடியோடு சரிந்தது. மெயின் அருவிக்கு செல்லும் பாதை, குளிக்கும் இடம் ஆகியவை சேதமடைந்தது.

Advertising
Advertising

இதனால் சுமார் 80 நாட்கள் வரை அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அங்கு சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த 29ம் தேதி முதல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காலாண்டு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்த வண்ணம் உள்ளனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகரித்த நிலையில், நேற்று காந்தி ஜெயந்தி விடுமுறை என்பதால் வெளிமாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஒகேனக்கல்லுக்கு கார், பஸ், டிராவல்ஸ் வேன்களில் மக்கள் வந்தனர்.

அவர்கள் கோத்திக்கல் பகுதியில் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர். பரிசலில் செல்ல பலரும் ஆர்வம் காட்டியதால் பரிசல் துறையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் மசாஜ் தொழிலாளர்களும் நேற்று சுறுசுறுப்பாக காணப்பட்டனர். அருவியில் குளிக்க அனுமதியளித்ததை தொடர்ந்து, வெளியூர் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மசாஜ் செய்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் மசாஜ் செய்து, மெயினருவியில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நின்று குளியல் போட்டனர். பலரும் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்ததால் குளிக்க செல்லவும், அங்கிருந்து வெளியே வரமுடியாமலும் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியபோதும் யாரும் கண்டுகொள்ளவில்லை. காவிரி ஆற்றில் இளைஞர்கள், பெண்கள் குளித்து மகிழ்ந்ததையும் காண முடிந்தது. அதேபோல், ஆர்டரின் அடிப்படையில் சமையல் தொழிலாளர்கள் மீன் உணவுகளை தயார் செய்து, சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி வந்தனர். இரண்டு மாதத்திற்கு பின் ஒகேனக்கல் சுற்றுலாதலம் களைகட்டியுள்ளதால், பரிசல் ஓட்டிகளும், மசாஜ், சமையல் தொழிலாளர்களும், உள்ளூர் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: