பிரதமர் தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தை 10 மாநில முதல்வர்கள் புறக்கணிப்பு: இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை என மோடி பேச்சு

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தை மேற்கு வங்கம், பீகார், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட 10 மாநில முதல்வர்கள் புறக்கணித்தனர். இந்த கூட்டத்தில், 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். இதன் ஆட்சிமன்ற குழுவில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களும் இடம் பெற்றுள்ளனர். பிரதமர் தலைமையில் நிதி ஆயோக்கின் 8வது ஆட்சிமன்ற குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன் சுகாதாரம், திறன் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் ,உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பிரச்னைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், இமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்கள் கலந்து கொண்டனர். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கர்நாடக முதல்வர் சித்தராமையா,

பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட 10 முதல்வர்கள் பங்கேற்கவில்லை. ஒன்றிய அரசின் சமீபத்திய அவசரச் சட்டம் காரணமாக கூட்டத்தை புறக்கணிப்பதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். பஞ்சாபின் நலன்களில் ஒன்றிய அரசு கவனம் செலுத்தவில்லை எனக்கூறி கூட்டத்தை புறக்கணிப்பதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். வெளிநாடு பயணம் காரணமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ராஜஸ்தான் முதல்வர் கெலாட், கலந்து கொள்ளாததற்கு உடல்நலக் காரணங்களை மேற்கோள் காட்டியுள்ளார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஏற்கனவே ஒப்பு கொண்டிருந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டி இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறினார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை. மணிப்பூரில் வன்முறை சம்பவம் காரணமாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் பங்கேற்கவில்லை.
நாட்டின் எதிர்கால திட்டங்களை வகுப்பதற்கான, பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தை 10 மாநில முதல்வர்கள் புறக்கணித்திருப்பது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ‘‘வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு பொதுவான தொலை நோக்கு பார்வை உருவாக்குவது அவசியம். மாநிலங்கள் வளர்ச்சியடைந்தால் நாடும் வளர்ச்சி பெறும். நிதி விவகாரத்தில் மாநிலங்கள் விவேகமான முடிவுகளை எடுத்தால் அவை நிதி அடிப்படையில் பலமானதாகவும், மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்வதற்கும் உகந்ததாக இருக்கும்’’ என்றார்.

ஜிஎஸ்டி நிவாரணம் கோரிக்கை
நிதி ஆயோக் கூட்டத்தில் சட்டீஸ்கர் முதல்வர் பாகேல் பேசும்போது, ‘‘ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட நிரந்தரமாக நிவாரணம் வழங்க வகை செய்ய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.19 ஆயிரம் கோடியை திரும்ப வழங்க வேண்டும்’’ என்றார். அதே போல், இமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் பேசுகையில்,‘‘ புதிய பென்சன் திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள ரூ.9,242 கோடியை மாநிலத்துக்கு வழங்க பென்சன் நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத்துக்கு ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

மக்களுக்கு விரோதமானது
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜ மூத்த தலைவர் மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘நாட்டின் வளர்ச்சிக்கான முழு குறிக்கோள், கொள்கை கட்டமைப்பு, திட்டங்களை நிர்ணயிப்பதற்கான முக்கிய அமைப்பாக நிதி ஆயோக் இருக்கின்றது. 100க்கும் மேற்பட்ட விவகாரங்கள் விவாதிக்கப்படவேண்டிய கூட்டத்தில், 10 மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை என்றால் அவர்கள் தங்களது மாநிலங்களின் குரலை இந்த கூட்டத்திற்கு கொண்டு வரவில்லை. இந்த முடிவானது மிகவும் துரதிருஷ்டவசமானது, பொறுப்பற்றது மற்றும் மக்களுக்கு விரோதமானது’’ என்றார்.

The post பிரதமர் தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தை 10 மாநில முதல்வர்கள் புறக்கணிப்பு: இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை என மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: