மாணவர் நலனில் அக்கறை

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள், ஏப்ரல் 28ம் தேதி முடிந்து, ஒரு மாத காலம் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை வெயில் உச்சத்தில் இருப்பதால், விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று பெற்றோர்களும், கல்வியாளர்களும் வேண்டுகோள் விடுத்தனர். இருப்பினும், திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. கோடையின் உக்கிரம் தொடர்ந்து நீடிப்பதால், பள்ளி திறப்பை குறைந்தபட்சம் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால், ஏற்கனவே திட்டமிட்டபடி 6 முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும், 1 முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற நிலைப்பாட்டில் தமிழக பள்ளி கல்வித்துறை உறுதியாக இருந்தது.

தமிழகம் முழுவதும் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், இதுவரை பெரிய அளவில் மழை பெய்யவில்லை. கோடை வெப்பமும் குறையவில்லை. இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர், ‘‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, வருகிற ஜூன் 7ம் தேதி ஒட்டுமொத்தமாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும்’’ என அறிவித்தார்.

‘‘கோடை விடுமுறை என்பது மாணவர்களை ஆசுவாசப்படுத்தக்கூடிய காலம், கோடை விடுமுறை காலத்திலும் மாணவர்களுக்கான பாடங்களை நடத்துவதை தனியார் பள்ளிகள் தவிர்க்க வேண்டும். இதை வேண்டுகோளாக முன்வைக்கிறேன். ஆங்கில பயிற்சி, நீச்சல் பயிற்சி, விளையாட்டு போன்ற திறமைகளுக்கான காலமாக கோடை விடுமுறையை பயன்படுத்த வேண்டும். இதற்கு, தமிழ்நாடு அரசு ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது’’ என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். மாணவர் நலனில் அக்கறையுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, பள்ளி மாணவர்களுக்கு பெரும் ‘குட் நியூஸ்’ ஆக அமைந்துள்ளது.

ஒரு குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில், அக்குழந்தையின் வளரும் ஆண்டுகள் முக்கியமானவை. இந்த ஆண்டுகளில்தான் குழந்தைகள் சிறந்த, வலிமையான நபர்களாக உருவாக ஒரு வலுவான அடித்தளம் அமைக்கப்படுகிறது. ஒரு குழந்தையின் ஆளுமையை, வடிவமைப்பதில் பள்ளிக்கல்வி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்கள், கல்வியில் சிறந்து விளங்குவதோடு, தங்களது உடல்நலத்தையும் பேண வேண்டியது அவசியமாகிறது. போட்டி நிறைந்த இவ்வுலகில் கல்வியறிவுடன், உடல்திறனையும் சீராக மேம்படுத்துவது ரொம்பவே முக்கியம்.

மாணவர்கள், தங்களது படிப்பின் ஒரு பகுதியாக அன்றாடம் உடல்சார்ந்த பயிற்சிகளை மேற்கொண்டு வரும்பட்சத்தில், மன அழுத்தம் குறைந்துவிடுகிறது. கற்றல் திறன் மேம்படுகிறது. உடல் சார்ந்த பயிற்சிகளுடன் யோகா, நடனம் போன்றவையும் இடம்பெற வேண்டும். இவை, மன அழுத்தம் மட்டுமின்றி, சோர்வு, கொந்தளிப்பு, ரத்த அழுத்தம், பதற்றம், கவலை, விரக்தி போன்ற எல்லா தொந்தரவுகளில் இருந்தும் விடுதலை தருகிறது. எனவே, விடுமுறை நீட்டிப்பு என்ற இந்த வாய்ப்பை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

The post மாணவர் நலனில் அக்கறை appeared first on Dinakaran.

Related Stories: