விவசாய நிலம் இல்லாத விவசாயியா.. என கிண்டலடிக்கும் இலை தொண்டர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘விவசாயின்னு சொல்றவரு விவசாய நிலமே இல்லைன்னு சொல்லி அதிர்ச்சி கொடுத்திருக்கிறாராமே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘பல்வேறு இடையூறுகளுக்கு பிறகு இலைக்கட்சியின் முக்கியமான பதவியை ஏற்றுள்ள சேலத்துக்காரருக்கு நெருக்கடி முற்றுகிறதாம். சட்டமன்ற தேர்தலின்போது எலெக்சன் கமிஷனுல தாக்கல் செய்த பிரமாண பத்திரத்துல பல்வேறு உண்மை தகவலை மறைச்சுட்டதாக வழக்கு ஒன்றை மாங்கனி போலீசார் பதிவு செஞ்சிருக்காங்க. அதுல உண்மை இருப்பதாக போலீசார் கோர்ட்டுல தெரிவிச்சிருப்பதால் சேலத்துக்காரர் ரொம்பவே ஷாக்குல இருக்காராம். அதுல ஒன்னு தனக்கு விவசாய நிலம் இல்லைன்னு சேலத்துக்காரர் சொல்லியிருக்காராம்.

இதனால இலைக்கட்சிக்கார்கள் ரொம்பவே அதிர்ச்சியில இருக்காங்களாம். தன்னை ஒரு விவசாயின்னு சொன்னதோடு மட்டுமல்லாமல் இது மண்வெட்டி பிடித்த கையின்னும், தான் விவசாயியாக இருப்பதால்தான் விவசாயிகளின் துன்பங்கள் கண்ணுக்கு தெரியுதுன்னும் சொன்னாரே. அப்படின்னா எல்லாம் பொய்யான்னு அடிப்பொடிகள் தங்களுக்கு தாங்களே கேள்விய எழுப்பிக்கிட்டிருக்காங்களாம்.. இது பொய் கேசு. எனவே தள்ளுபடி செய்யணுமுன்னு ஏற்கனவே கோர்ட்டில் அப்ளிகேஷன் வேற போட்டிருக்காரு. அதுல என்ன ரியாக் ஷன் வரப்போகுதோ? என்ற எதிர்பார்ப்பும் ரத்தத்தின் ரத்தங்களிடம் எகிறிக்கிட்டு இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நோட்டீஸ் உத்தரவால் ஆப்சென்ட் ஆபிசர்ஸ் அதிர்ச்சியில் இருக்காராமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘எல்லா மாவட்டத்துலயும், மாசத்துல வெள்ளிக்கிழமைகள்ல விவசாயிங்க குறைதீர்க்கும் மீட்டிங் நடக்குது. அதேபோல வெயிலூர் மாவட்டத்துலயும் மாசத்துல கடைசி வெள்ளிக்கிழமை மீட்டிங் நடக்குது. இதுல, பெரும்பாலான ஆபிசர்ஸ் ஆப்சென்ட் ஆகிடுறாங்களாம். சில பேர் உண்மையாகவே உடல்நிலை சரியில்லாமலோ, முக்கிய பணி காரணமாகவோ வராமல் இருக்காங்க. ஆனா சில குறிப்பிட்ட டிபார்ட்மெண்ட் ஆபிசர்ஸ் தொடர்ந்து கூட்டத்துக்கு வராமலே இருக்காங்களாம். நேற்று நடந்த கூட்டத்துலயும் சில ஆபிசர்ஸ் வரவில்லை. இதனால டிஸ்ட்ரிக் ரெவின்யூ ஆபிசர் அடுத்த கூட்டத்துக்கு வராதவர்களை கணக்கெடுத்து, அவங்களுக்கு ேநாட்டீஸ் வழங்கனும்னு உத்தரவிட்டிருக்காரு.

இது எச்சரிக்கையாக மட்டும் இல்லாம, அடுத்த கூட்டத்துக்கு வராதவர்களுக்கு கட்டாயம் நோட்டீஸ் வழங்கி, நடவடிக்கை எடுக்கணும், அப்பத்தான் எங்கள் குறைகளை சொல்லி நாங்க தீர்வு காண முடியும்னு விவசாயிகள் கோரிக்கை வெச்சிருக்காங்க. இந்த நோட்டீஸ் விவகாரத்தை கேட்டு, ஆப்சென்ட் ஆனவர்கள் அதிர்ச்சியடைந்திருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘களையெடுக்கும் காவல்துறையால் மிரண்டு போயிருக்காமே சாராய கருப்பு ஆடுகள்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புரம் மாவட்டத்தில் நடந்த விஷ சாராய பலி சம்பவம் காவல்துறையில் பெரும் சலசலப்பை உண்டாக்கிடுச்சாம். அதனால அரசாங்கம் கள்ளச்சாராய விற்பனையாளர்களை கைது செய்ய வேண்டும் என்றும், சாராய விற்பனைக்கு துணை போகும் காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளை கண்டுபிடிக்கவும் உயர் அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறிப்பாக புரம் மாவட்டம் அடுத்துள்ள குறிச்சி மாவட்டத்தில் சாராய விற்பனையாளர்களிடம் தொடர்பில் இருந்த காக்கிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்தந்த பகுதியில் உள்ள கள்ளச்சாராய வியாபாரிகளிடம் தொடர்பில் இருந்த கருப்பு ஆடுகளின் எண்களை உளவுத்துத்துறை ஆராய்ந்து வருவதாக தெரிகிறது. குறிப்பாக கல்வராயன்மலை, சின்னசேலம், கீழ்குப்பம் பகுதியில் உள்ள காவல் நிலைய போலீசாரின் எண்கள் சாராய வியாபாரிகளிடம் தொடர்பில் உள்ளதா என கண்காணிக்கப்படுதாம். அவ்வாறு இருந்தால் கடும் நடவடிக்கையும் இருக்குமாம். இதனால் தொடர்பில் இருந்த மாமூல் போலீசார் கதிகலங்கி போய் உள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பழைய பவர்புல் அமைச்சர் கோயில், கோயிலா போயிட்டு இருக்காராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘அல்வா தொகுதியின் எம்எல்ஏ ஒரு காலத்தில் இலை கட்சியில் பவர்புல் அமைச்சராக இருந்தவர். மம்மி மறைவுக்கு பிறகு இலை கட்சியில் இருந்து நடையை கட்டி தேசிய கட்சியில் இணைந்தார். கடந்த தேர்தலில் இலை கட்சி தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க, அதே தொகுதியில் நின்று எம்எல்ஏவும் ஆகி விட்டார். தற்போது தேசிய கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும் அவர் தான். எனினும் அவருக்கு அரசியலில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மீண்டும் விஐபி அந்தஸ்துக்கு உயர முடியவில்லையே என்ற ஏக்கம்……தற்போது அல்வா ஊரின் எம்எல்ஏ ஊர், ஊராக கோயில் கோயிலாக சுற்றி வருகிறாராம். ஆன்மிகத்திலும், ஜோதிடத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கோயில்களில் தனது வாரிசுடன் சேர்ந்து அன்னதானம் செய்து வருகிறாராம். எல்லாம் மக்களவை தேர்தலை மனதில் வைத்து தான் என்று ஆருடம் சொல்கின்றனர் தேசிய கட்சியினர். அவரது கனவு பலிக்குமா என்பது இனி தான் தெரியும்’’ என்றார் விக்கியானந்தா.

The post விவசாய நிலம் இல்லாத விவசாயியா.. என கிண்டலடிக்கும் இலை தொண்டர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: