அண்ணாமலை மீது மாஜி நிர்வாகி கோவை கமிஷனரிடம் பரபரப்பு புகார் எனது உணவகத்தை அபகரித்து ‘பாஜ சேவை மையம்’ அமைப்பு: ரூ.20 லட்சம் பொருட்களை கொள்ளையடித்து மாவட்ட தலைவர், குண்டர்கள் மூலம் கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றச்சாட்டு

கோவை: ‘அண்ணாமலை தூண்டுதலின்பேரில், எனது உணவகத்தை அபகரித்து பாஜ சேவை மையம் அமைத்து, அங்கிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதை தட்டிக்கேட்டால் மாவட்ட தலைவர், குண்டர்கள் மூலம் கொலை மிரட்டல் விடுப்பதாக பாஜ முன்னாள் மாநில செயலாளர் கோவை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை சாயிபாபா காலனி ராமலிங்கம் நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை (47). பாஜ உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக இருந்த இவர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தார்.

இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் பாஜவின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக இருந்தேன். நேற்று முன்தினம் பதவியில் இருந்து என்னை நீக்கிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் எனக்கு எந்த தகவலும் வரவில்லை. பாஜவில் ஆர்வத்துடன் சேர்ந்தேன். ஏன் சேர்ந்தேன் என வருத்தப்படும் அளவிற்கு செய்து விட்டார்கள். ‘பழைய சோறு டாட் காம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் உணவகங்களுக்கு மூலிகை பொருட்கள் வழங்கும் கடை நடத்தி வருகிறேன். சாயிபாபா காலனி ராமலிங்கம் நகர் பகுதியில் பழனிச்சாமி என்பவரின் கட்டிடத்தில் வாடகை அடிப்படையில் எனது பணிகளுக்காக கட்டிடத்தை வாங்கினேன். எழுத்துப்பூர்வமாக வாடகை ஒப்பந்தமும் செய்து கொண்டோம்.‌ கட்டிடத்தை சீரமைக்க நான் பல லட்சம் ரூபாய் செலவு செய்து இருக்கிறேன்.

இதற்கிடையே பழனிச்சாமிக்கும் எனக்கும் வாடகை ஒப்பந்த விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. நான் பாஜவில் இருப்பதால் பழனிச்சாமி, பாஜ மாநில தலைவர் அண்ணாமலையிடம் இந்த விவகாரம் தொடர்பாக பேசியிருக்கிறார். அவர் கோவை மாவட்ட பாஜ செயலாளர் உத்தம ராமசாமி மற்றும் சிலரை அனுப்பி கட்டிடத்தை காலி செய்ய மிரட்டினார். எனக்கு தெரியாமல் நான் இருந்த கட்டிடத்தில் இருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஆட்களை வைத்து திருடி எடுத்து சென்றுவிட்டார். நான் எனது ஒப்பந்த கால கட்டிடத்திற்குள் செல்லவிடாமல் தடுத்து விட்டார். அங்கே 20 குண்டர்கள் இருக்கிறார்கள். நான் போனால் விடமாட்டார்கள். கொலை செய்து விடுவேன் என மிரட்டி வருகிறார்கள். நான் பயன்படுத்தி வந்த கட்டிடத்தை இப்போது பாஜ சேவா மையம் என போர்டு வைத்து விட்டார்கள்.

இன்னொருவர் இடத்தில் பொருட்களை திருடி கொடியை நட்டு போர்டு வைப்பது சரியா?. இப்படி சேவை செய்வதாக இருந்தால் இந்த கட்சிக்கு போயிருக்கமாட்டேன். சொந்த கட்சிக்காரனையே மிரட்டுகிறார்கள். கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் தூண்டுதலின் பேரில் மாவட்ட பாஜ தலைவர் தலைமையில் நடந்த இந்த செயல் தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருக்கிறேன். வாடகை கட்டிட விவகாரத்தில் கட்டிட உரிமையாளர் தரப்பிற்கு ஆதரவாக நீதிமன்றம் காலி செய்ய உத்தரவிட்டால் அதை நான் செய்து விடுவேன். பண விவகாரத்தில் அண்ணாமலை தரப்பினர் ஏன் வருகிறார்கள்?. அவரின் நேரடியான தூண்டுதல், மிரட்டல் தௌிவாக தெரிகிறது. நான் பயன்படுத்திய அலுவலகத்தை பாஜ சேவை மையமாக மாற்ற திட்டமிட்டு அவர்கள் இது போன்ற செயல்களை செய்திருப்பதாக தெரிகிறது‌.

‘‘உனக்கும் இந்த இடத்துக்கும் சம்பந்தமில்லை. ஏதாவது இருந்தாலும் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் பேசிக்கொள்’’ என என்னை மிரட்டி வருகிறார்கள். எனவே, அண்ணாமலை மற்றும் உத்தம ராமசாமி மீது போலீசார் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்து இருக்கிறேன். எனது சேவை மற்றும் மக்களை அணுகும் திட்டங்களை தாங்கள் செய்ததுபோல் காட்டிக்கொள்ள அண்ணாமலை தரப்பினர் இதுபோன்ற அடாவடி செயலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. போலீசார் உரிய முறையில் இதனை விசாரிக்க வேண்டும். இவ்வாறு அண்ணாதுரை கூறினார். இந்நிலையில், உணவகத்தை காலி செய்யாமல் பூட்டை உடைத்து பொருட்களை எடுத்து சென்றுவிட்டதாக கட்டிட உரிமையாளர் பழனிச்சாமி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளார்.

* கட்ட பஞ்சாயத்து செய்த அண்ணாமலை
அண்ணாமலையால் மிரட்டி அபகரிக்கப்பட்டதாக கூறப்படும் கட்டிடம் தொடர்பாக அந்த கட்டிடத்தின் உரிமையாளருக்கும், அண்ணாதுரைக்கும் கடந்த 2 மாதத்துக்கு முன்பே பிரச்னை எழுந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த விவகாரம் கோவை நீதிமன்றத்துக்கு சென்றது. அப்போதிலிருந்தே அண்ணாமலை இந்த விவகாரத்தில் தலையிட்டு கட்ட பஞ்சாயத்து செய்து வந்துள்ளார். கட்டிட உரிமையாளருக்கு ஆதரவாக செயல்பட்டு, கட்சி நிர்வாகியான அண்ணாதுரை உணவகத்தை காலி செய்ய தீவிரமாக வேலை செய்து உள்ளார். இதனால், அண்ணாதுரை கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்து வந்துள்ளார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் தர முயன்றார். எனவேதான் கடந்த 21ம் தேதி அவரது மாநில செயலாளர் பதவியை, அந்த பிரிவின் மாநில தலைவர் பறித்துள்ளார்.

The post அண்ணாமலை மீது மாஜி நிர்வாகி கோவை கமிஷனரிடம் பரபரப்பு புகார் எனது உணவகத்தை அபகரித்து ‘பாஜ சேவை மையம்’ அமைப்பு: ரூ.20 லட்சம் பொருட்களை கொள்ளையடித்து மாவட்ட தலைவர், குண்டர்கள் மூலம் கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: