திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் மின்னொளியில் தெப்ப திருவிழா வெள்ளோட்டம்: தெப்பம் 216 பேரல்களில் உருவாக்கம்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் மின்னொளியில் தெப்ப திருவிழா வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. 216 பேரல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் பூங்கோயில் என்று அழைக்கப்பட்டு வரும் இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும்,உற்ச்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர்.கோயில் 5 வேலி,குளம் 5 வேலி,ஒடை 5 வேலி நிலபரப்பில் அமையப்பெற்றது என்ற சிறப்பினை கொண்ட இக்கோயிலுக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேராகும்.

கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் இருந்து வரும் கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைப்பெறுவது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டில் பங்குனி உத்திர விழா துவக்கத்திற்காக மஹாதுவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றும் நிகழ்ச்சியானது கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி நடைபெற்ற நிலையில் கடந்த மாதம் 1ம் தேதி ஆழித்தேரோட்ட விழாவானது நடைபெற்றது.

இந்நிலையில் தெப்ப திருவிழாவானது இன்று (25ம் தேதி) துவங்கி நாளை மறுதினம் (27ம் தேதி) வரையில் தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. மேலும் நாள் ஒன்றுக்கு இரவு 3 சுற்றுகள் வீதம் இரவு 7 மணியளவில் துவங்கி மறுநாள் காலை 6 மணி வரையில் கண்ணை ஜொலிக்கும் மின்னொளியில் இந்த தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். மேலும் இரும்பு பேரல்கள், மூங்கில் மற்றும் பலகை கொண்டு தெப்பம் உருவாக்கப்படும் நிலையில் இதற்காக 432 டின் பேரல்களில் ஒரு அடுக்குக்கு 216 பேரல்கள் வீதம் 2 அடுக்குகளாக 7 அடி உயரத்திலும் 2 ஆயிரத்து 500 சதுர அடி அகளத்திலும் தெப்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விழாவினையொட்டி முதல் நாள் கமலாலய குளத்தில் தெப்ப வெள்ளோட்டம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் நேற்று இரவு இந்த வெள்ளோட்டமானது நடைபெற்றது. மேலும் இந்த தெப்ப திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயிலின் செயல் அலுவலர் அழகியமணாளன் தலைமையில் அலுவலர்கள் செய்துள்ளனர்.

தெப்ப குளத்தை சுற்றி உரிய பாதுகாப்பு; பொதுமக்கள், பக்தர்கள் வேண்டுகோள்: கடந்தாண்டு நடைபெற்ற தெப்ப திருவிழாவின் போது 2ம் நாள் நிகழ்ச்சியின் போது குளத்தின் மேற்குபுறத்தில் இருந்து வரும் மண்டபம் ஒன்றின் தூணில் தெப்பம் இடிப்பட்டு அங்கிருந்து சிறிது தூரம் தெப்பம் நகர்ந்து சென்ற பின்னர் இந்த தூணானது அடியோடு சாய்ந்து விழுந்தது. மேலும் தெப்பம் நகர்ந்த பின்னர் தூண் விழுந்தது மற்றும் குளத்திற்குள் விழுந்த காரணங்களால் பக்தர்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. மேலும் 3ம் நாள் நிகழ்ச்சியின் போது, மதியம் குளத்திற்குள் குளித்துகொண்டிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பலூன் விற்ற சிறுமி ஒருவர் என 2 பேர் ஒரே நேரத்தில் பலியானதையடுத்து அன்று இரவு 9 மணி வரையில் இருவரது உடல்களையும் தேடும் பணி நடைபெற்றதன் காரணமாக தெப்ப திருவிழா நடைபெறுமா என பெரும் அச்சம் ஏற்ப்பட்டு அதன் பின்னர் ஒரு வழியாக விழா நடைபெற்றது. எனவே, நடப்பாண்டில் அதுபோன்று ஒரு சம்பவம் ஏற்படாதவாறு போலீசார் குளத்தை சுற்றி உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், கடந்தாண்டை போன்று இடிபடாமல் தெப்பத்தை பாதுகாப்பாக கோயில் நிர்வாகம் இயக்க வேண்டும் என்றும் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் மின்னொளியில் தெப்ப திருவிழா வெள்ளோட்டம்: தெப்பம் 216 பேரல்களில் உருவாக்கம் appeared first on Dinakaran.

Related Stories: