சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார் நீதிபதி எஸ்.வைத்தியநாதன்..!!

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதி பணி ஓய்வுபெற்றார். அவரை தொடர்ந்து செப்டம்பர் மாதம் சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த டி.ராஜா நியமிக்கப்பட்டு, அவரும் நேற்று ஓய்வு பெற்றார்.

இதையொட்டி சென்னை உயர்நீதிமன்றத்தின் 2வது மூத்த நீதிபதியான வைத்தியநாதனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார். அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்.வைத்தியநாதன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பு தலைமை நீதிபதியான வைத்தியநாதனுக்கு அரசு தலைமை வழக்கறிஞர் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொழிற்சங்கவாதியான தந்தை வி.சுப்ரமணியனின் பிறந்த தின நூற்றாண்டில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பணிகளை தொடங்கியதில் மகிழ்ச்சி அளிப்பதாக பொறுப்பு தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

கோவையில் 1962ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், பள்ளி, சட்டப்படிப்பை சென்னையில் முடித்தார். 1986ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞர் தொழிலை தொடங்கினார். 2013ல் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்ற அவர், 2015-ல் ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதியானார். தற்போது, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார் நீதிபதி எஸ்.வைத்தியநாதன்..!! appeared first on Dinakaran.

Related Stories: