திண்டிவனம் அருகே வீடு புகுந்து 9 பவுன் நகை, ₹1.5லட்சம் திருட்டு

திண்டிவனம், மே 23: திண்டிவனம் அருகே வீட்டில் புகுந்து 9 பவுன் தங்க நகைகள், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடு பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடிசைபாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் விஜயராஜ்(35). இவர் ஒரு மாதத்திற்கு மேலாக மனைவியுடன் மாமியார் வீட்டில் தங்கி உள்ளார். விஜயராஜின் தாய் கலா(60) என்பவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்பக்க கதவை தாழிட்டுக்கொண்டு, முன்பக்க கதவை திறந்து வைத்து விட்டு கலா உறங்கி உள்ளார். நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு தாழிட்டும், பின்பக்க கதவு திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிகள் கலைந்த நிலையில் கிடந்துள்ளது. மேலும் பீரோவின் மேல் இருந்த சாவியை மர்ம நபர்கள் எடுத்து, பீரோவை திறந்து 9 பவுன் தங்க நகைகள், ஒரு லட்சம் ரூபாய் பணம், மற்றும் பூஜை அறையில் சாமி படத்தின் பின்பக்கம் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம், 3 வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post திண்டிவனம் அருகே வீடு புகுந்து 9 பவுன் நகை, ₹1.5லட்சம் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: