ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கம் செப்.30க்கு பிறகும் ரூ.2,000 செல்லும்: அவசரமின்றி மாற்றலாம்

புதுடெல்லி: ‘நிர்ணயிக்கப்பட்ட செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகும் ரூ.2000 நோட்டுகள் செல்லுபடியாகும், 4 மாதம் அவகாசம் இருப்பதால் மக்கள் அவசரமின்றி வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்’ என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் கூறினார். மக்கள் மத்தியில் பெரிய அளவில் புழக்கத்தில் இல்லாத ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாகவும், அவற்றை செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளுமாறும் ரிசர்வ் வங்கி கடந்த 19ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்த நோட்டுகளை ஒருவர் தனது சொந்த வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம், வங்கியில் நேரடியாக கொடுத்தும் மாற்றிக் கொள்ளலாம். ஒருமுறை அதிகபட்சம் ரூ.20 ஆயிரத்துக்கான ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியும். அதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை. வங்கியில் ரூ.2000 நோட்டை மாற்றிக் கொள்ளும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நேற்று அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: பணப்பரிவர்த்தனை செய்வதில் ரூ.2000 நோட்டுகள் மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன.

எனவே பொருளாதாரத்தில் இதன் தாக்கம் மிக மிக குறைவாகவே இருக்கும். கடந்த 2013-14ம் ஆண்டில் கூட, 2005க்கு முன் அச்சடிக்கப்பட்ட நோட்டுகள் மக்களிடம் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. எனவே, செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகும் ரூ.2000 நோட்டுகள் செல்லுபடியாகும். இது சட்டப்பூர்வமான கரன்சி நோட்டாகத்தான் தொடரும். இந்த நடவடிக்கை மூலம் அச்சடிக்கப்பட்டதில் எத்தனை நோட்டுகள் வங்கிக்கு திரும்ப வரும் என்பதை பார்ப்போம். பெரும்பாலான ரூ.2000 நோட்டுகள் வங்கிக்கு திரும்ப வரும் என எதிர்பார்க்கிறோம். அதை
வைத்து நாங்கள் முடிவு செய்வோம். எனவே, செப்டம்பர் 30க்கு பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து இப்போதைக்கு பதில் சொல்ல முடியாது. வங்கிக் கணக்கில் பணம் மாற்றவும், டெபாசிட் செய்யவும் போதுமான அவகாசம் உள்ளதால் மக்கள் அச்சப்பட வேண்டாம். போதுமான நோட்டுகள் கையிருப்பில் உள்ளதால், கவலைப்பட வேண்டியதில்லை. மீண்டும் ரூ.1000 நோட்டுகள் கொண்டு வரப்படுமா என்கிற யூகத்திற்கு இப்போது பதிலளிக்க முடியாது. தற்போது அத்தகைய திட்டம் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கம் செப்.30க்கு பிறகும் ரூ.2,000 செல்லும்: அவசரமின்றி மாற்றலாம் appeared first on Dinakaran.

Related Stories: