குடிநீர் தொட்டியில் விஷம் கலப்பா?

 

ஸ்ரீமுஷ்ணம், மே 22: ஸ்ரீமுஷ்ணத்தில் குடிநீரில் விஷம் கலக்கப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆய்வுக்கு மாதிரி அனுப்பி வைக்கப்பட்டது. ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்கு உட்பட்ட மங்காங்குளத்தெருவில் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் விஷமிகள் சுமார் ஒரு மணிநேரம் மின்சாரத்தை நிறுத்திவிட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டியில் ஏரி அங்குள்ள தேன்கூட்டை கலைத்து தேன் எடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் தேனீக்கள் வெளியேறி பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தியது.

மேலும் இரவு நேரத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் நீர்தேக்க தொட்டி மீது விஷமிகள் ஏறியதால் குடிநீரில் விஷப்பொருள் ஏதாவது கலந்துவிட்டார்களா? என்ற சந்தேகத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் பாரதிதாசன், குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும் சுகாதாரத்துறை சார்பில் சுகாதார ஆய்வாளர்கள் அன்பரசன் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தொட்டியில் உள்ள குடிநீரை முழுமையாக வெளியேற்றி குடிநீர் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்து புதியதாக குடிநீர் ஏற்றப்பட்டு விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். வார்டு உறுப்பினர்கள் செல்வி கர்ணன், சதிஷ்குமார், தி.மு.க நகர செயலாளர் செல்வகுமார், பேரூராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோரும் குடிநீர் தொட்டியை பார்வையிட்டனர்.மேல்நிலை குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் ஏறிய சம்பவத்தால் குடிநீரில் ஏதாவது விஷம் கலந்தார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து தப்பியோடிய மர்ம நபர்களை முஷ்ணம் போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post குடிநீர் தொட்டியில் விஷம் கலப்பா? appeared first on Dinakaran.

Related Stories: