ஒன்றிய அரசுடன் அதிகார மோதல் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கிறார் கெஜ்ரிவால்: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேரில் சந்தித்து ஆதரவு

புதுடெல்லி: ஒன்றிய அரசுடனான நிர்வாக அதிகார மோதல் தொடர்பாக மம்தா பானர்ஜி, சரத் பவார், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க இருப்பதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறி உள்ளார். டெல்லியில் நிர்வாக சேவைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு என உச்ச நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஒன்றிய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ததோடு, டெல்லியில் உயர் அதிகாரிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் ஆணையம் ஒன்றை உருவாக்க அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதற்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவசர சட்டம் இயற்றப்பட்டால் அடுத்த 6 மாதத்தில் நாடாளுமன்றத்தில் இரு அவையிலும் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். எனவே இந்த மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுக்க எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோர உள்ளதாக கெஜ்ரிவால் நேற்று தெரிவித்துள்ளார். முன்னதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் டெல்லியில் நேற்று கெஜ்ரிவாலை சந்தித்து பேசினர். அதன் பிறகு பேட்டி அளித்த நிதிஷ் குமார், இந்த விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்தார்.

பின்னர் பேட்டி அளித்த கெஜ்ரிவால், ‘‘நாடாளுமன்றத்தில் அவசர சட்ட மசோதாவை முறியடிக்க எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளேன். வரும் 23ம் தேதி (நாளை) கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும், 24ம் தேதி மும்பையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவையும், 25ம் தேதி தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளேன். அனைத்து கட்சி தலைவர்களையும் முறைப்படி சந்தித்து ஆதரவு கேட்பேன்’’ என கூறி உள்ளார்.

The post ஒன்றிய அரசுடன் அதிகார மோதல் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கிறார் கெஜ்ரிவால்: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேரில் சந்தித்து ஆதரவு appeared first on Dinakaran.

Related Stories: