ஊட்டி மலர் கண்காட்சி 3 நாளில் 93,000 பேர் வருகை

ஊட்டி: ஊட்டி மலர் கண்காட்சியை 3 நாளில் 93 ஆயிரம் பேர் பார்த்து மகிழ்ந்தனர். ஊட்டியில் கோடை விழாவையொட்டி, முக்கிய நிகழ்ச்சியான 125வது மலர் கண்காட்சி கடந்த 19ம் தேதி ஊட்டியில் துவங்கியது. அங்கு 45 ஆயிரம் பல வண்ண கொய் மலர்களை கொண்டு மயில் மாதிரி அமைக்கப்பட்டிருந்தது. மலர்களால் ஆன தமிழ்நாடு மாநில சின்னங்கள், அழியும் பட்டியலில் உள்ள விலங்குகளின் உருவங்கள், இளைஞர்களை கவரும் வகையில் மலர்களால் ஆன செல்பி ஸ்பாட் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன.

அலங்கார மேடைகளில் கார்னேசன், ரோஜா மலர்கள், ஆந்தூரியம், ஆர்க்கிட் மலர்கள் ஆகியவைகளும் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நாளை வரை (23ம் தேதி) கண்காட்சி நடைபெற உள்ள நிலையில், விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவில் குவிந்தனர். குறிப்பாக உள்ளூர் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பெரிய புல் மைதானத்தில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். 3 நாட்களில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பூங்காவை பாா்த்து ரசித்துள்ளனர். கண்காட்சி நாளை வரை நடைபெறும்.

* ஏற்காட்டில் 46வது கோடை விழா தொடங்கியது
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 46வது கோடைவிழா நேற்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு, அண்ணாபூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மலர்க்கண்காட்சியை தொடங்கி வைத்து, பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த விழாவில் 42 துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையில், 50 வகையான சிறுதானிய உணவுகள் தயார் செய்யும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. வரும் 28ம் தேதி வரை நாள்தோறும் பல்வேறு விதமான போட்டிகள், விளையாட்டுகள், கலைநிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்தப்படவுள்ளன. அண்ணா பூங்காவில் 5 லட்சம் மலர்களை கொண்டு, மலர் கண்காட்சியை தோட்டக்கலை ஏற்பாடு செய்துள்ளது. நேற்று விடுமுறைநாள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

The post ஊட்டி மலர் கண்காட்சி 3 நாளில் 93,000 பேர் வருகை appeared first on Dinakaran.

Related Stories: