கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றனர்..!!

பெங்களூரு: கர்நாடக மாநில 16வது சட்டபேரவையின் புதிய முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவகுமார் மற்றும் 8 அமைச்சர்கள் இன்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்பு பதவியேற்றனர். விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்பட தேசிய தலைவர்கள் பங்கேற்றனர். கர்நாடக மாநிலத்தின் 15வது சட்டபேரவையின் பதவி காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது.

16வது சட்டபேரவைக்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்தது. 13ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 135 இடங்களிலும், பா.ஜ 66 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 19 இடங்களிலும் மற்றும் 4 சுயேட்சைகள் வெற்றி பெற்றனர். முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் மேலிடம் இருவரையும் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதில் நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து சித்தராமையா கர்நாடக முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் அறிவிக்கப்பட்டனர்.

பின்னர் பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சித்தராமையா, சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து, தங்கள் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கும்படி ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் நேரில் சந்தித்து கடிதம் கொடுத்தனர்.

அதையேற்று கொண்ட ஆளுநர், மே 20ம் தேதி (இன்று) பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா பெங்களூரு கண்டீரவா விளையாட்டு அரங்கில் நடத்தப்படும் என்று தெரிவித்தார். அதன்படி இன்று பகலில் பதவியேற்பு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் காலை முதலே விழாவுக்கு வர ஆரம்பித்தனர். நுழைவு வாயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதில் சிலர் மயக்கமாகினர். இதனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் போலீசார் குவிக்கப்பட்டு, பொதுமக்கள் வரிசையாக உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அதேநேரத்தில், முதல்வராக சித்தராமையா, துணைமுதல்வராக டி.கே.சிவகுமார் ஆகியோர் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதை தொடர்ந்து டாக்டர் ஜி.பரமேஷ்வர், ராமலிங்கரெட்டி, கே.எச்.முனியப்பா, எம்.பி.பாட்டீல், சதீஷ்ஜார்கிஹோளி, ஜமீர்அகமதுகான், பிரியாங்கா கார்கே, கே.ஜே.ஜார்ஜ் ஆகிய 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கும் ஆளுநர் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், இமாச்சலபிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் காகோலிகோஸ் மற்றும் தேசிய தலைவர்கள், பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மருமகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் முதல்வர்களுக்கு இசட் பிளஸ் மற்றும் இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவின் போது அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க மாநில போலீசாருடன் சிஆர்பிஎப், எஎஸ்எல் பெட்டாலியன் படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநகரில் 12 துணை போலீஸ் கமிஷனர்கள், 11 ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 11 ஆயுதப்படை துணை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விரைவில் சித்தராமையா அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது கூடுதல் அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொகுசு காரின் வசதிகள்

முதல்வர் சித்தராமையாவுக்காக கர்நாடக அரசு சார்பில் புதிய சொகுசு கார் வாங்கப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த டொயட்டோ நிறுவனத்தின் தயாரிப்பான டொயட்டோ வெல்பயர் என்பது அந்த காரின் பெயர். இதன் விலை பெங்களூருவில் ரூ.96 லட்சம். வாகன பதிவெண், இதர உதிரிபாகங்கள் பொருத்துதல் உள்பட ஆன்ரோடு கட்டணமாக ரூ.1 கோடியே 19 லட்சம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள் அப்படி இந்த காரில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்று பார்ப்போம்… ஸ்பிளிட் எல்.இ.டி. முகப்பு விளக்குகள் உள்ளன. பகலில் எரியும் டி.ஆர்.எல். விளக்குகளும் இருக்கிறது. பனிமூட்டமாக இருக்கும் சமயத்தில் ஒளிரும் பாக் விளக்கு வசதியும் இதில் உள்ளது.

இது பெட்ரோலில் இயங்கும் ஹைபிரிட் மாடல் காராகும். 150 எச்.பி. திறன் கொண்ட 2.5 லிட்டர் என்ஜினை கொண்டது. இத்துடன் 143 எச்.பி. எலெக்ட்ரிக் மோட்டாரும் உள்ளது. இவை ஒன்றிணைத்து 145 எச்.பி. திறனை வெளிப்படுத்தக்கூடியவை. இதில் டிரைவர் உள்பட 6 பேர் அமர்ந்து பயணிக்கலாம். இருக்கைகள் ஒவ்வொன்றும் இடைவெளியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு இருக்கையும் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நமது வசதிக்கு ஏற்ப முன், பின் நகர்த்தும் வசதியும். கால்களை வைக்க கீழ் பகுதியில் சிறிய மெத்தை போன்ற பகுதி இருக்கிறது. அத்துடன் தேவைப்படும் போது மேற்கூரையை விலக்கி கொள்ளும் வசதி உள்ளது.

இந்த காரின் பக்கவாட்டில் சாத்தக்கூடிய ஸ்லைடிங் கதவுகள் உள்ளன. 3 விதமான சீதோஷ்ண நிலை கன்ட்ரோல் செய்யும் வசதி உள்ளது. இதில் 7 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்ட்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது மிகசிறந்த பொழுதை நமக்கு தரும். அதுபோல் பின் இருக்கைகளில் 10.2 அங்குல எல்.சி.டி. டி.விக்களும் உள்ளன. இந்த கார் 2020-ம் ஆண்டு தான் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

எடியூரப்பாவை முந்தும் சித்தராமையா?

கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையா இன்று பதவி ஏற்றார். 2013 முதல் 2018 வரை 5 ஆண்டுகள் முதல்வராக ஆட்சி செய்த சித்தராமையாவின் 2-வது இன்னிங்ஸ் இதுவாகும். இதுவரை 2 முறைக்கு மேல் கர்நாடக முதல்வராக பலர் பொறுப்பேற்று உள்ளனர். நீண்ட காலம் முதல்வராக இருந்த எடியூரப்பா மற்றும் ஹெக்டே ஆகியோரின் சாதனைகளை சித்தராமையா முறியடிக்க உள்ளார். 2 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்தால் இந்த முறை கர்நாடகாவில் அதிக காலம் பதவி வகித்த முதல்வர்களில் 3-வது இடத்திற்கு சித்தராமையா முன்னேறுவார். இந்த பட்டியலில் தற்போது சித்தராமையா 5-வது இடத்தில் உள்ளார்.

கர்நாடகா முதல்வராக இருந்தவர் பட்டியலில் தேவராஜ அர்சு முதலிடத்தில் உள்ளார். மாநிலத்தின் 9-வது முதல்வராக இருந்த தேவராஜ அர்சு, 2 முறை தனித்தனியாக 2,790 நாட்கள் மாநில முதல்வராக பணியாற்றினார். இவருக்கு அடுத்தபடியாக 2,729 நாட்கள் மாநில முதல்வராக பணியாற்றியவர் நிஜலிங்கப்பா. 1,967 நாட்கள் முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே, கர்நாடகாவில் அதிக காலம் ஆட்சி செய்தவர்களில் 3-வது இடத்தையும், 1,901 நாட்கள் முதல்வராக இருந்த எடியூரப்பா 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

கடந்த முறை சித்தராமையா 1,828 நாட்கள் பதவியில் இருந்தார். எனவே அவர் இந்த பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். சித்தராமையாவுக்குப் பிறகு, எஸ்.எம்.கிருஷ்ணா இந்தப் பட்டியலில் இடம்பெற்று 1,691 நாட்கள் முதல்வராக பதவி வகித்துள்ளார். கே.சி.ரெட்டி (1618 நாட்கள்), கெங்கல் ஹனுமந்தையா (1,603 நாட்கள்), பி.டி.ஜட்டி (1,393 நாட்கள்), வீரேந்திர பாட்டீல் (1,337 நாட்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். கடிடல் மஞ்சப்பா 73 நாட்கள் மட்டுமே கர்நாடக முதல்வராக ஆட்சி செய்தார்.

பாதிக்கும் மேற்பட்ட முதல்வர்கள் 2 ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஆட்சி செய்துள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 9 லிங்காயத்துகள், 7 ஒக்கலிகர்கள் 3 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 2 பிராமணர்கள் மற்றும் 2 வேறு சமூகத்தினர் முதல்வராக பதவி வகித்துள்ளனர்.சித்தராமையா ஏற்கனவே அவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

The post கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றனர்..!! appeared first on Dinakaran.

Related Stories: