செய்தித்தாள் படித்தால் வாசிக்கும் பழக்கம் மேம்படும் கார்த்தி ப சிதம்பரம் எம்.பி பேச்சு

 

காரைக்குடி, மே 19: ‘செய்தித்தாள் படித்தால் வாசிக்கும் பழக்கம் மேம்படும்’ என கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி பேசினார். காரைக்குடி முத்துப்பட்டணம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எம்எல்ஏ மாங்குடி தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் பரமேஸ்வரி வரவேற்றார். எம்எல்ஏ மாங்குடி முன்னிலை வகித்தார். கலையரங்கத்தை திறந்து வைத்து கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி பேசுகையில், ‘நமது கல்விமுறையில் உள்ள தேர்வு, மார்க், டியூசன் என்பது எனக்கு பிடிக்காது. தேர்வில் எடுக்கும் மார்க்கை வைத்து ஒருவரின் வாழ்கையை நிர்ணயம் செய்ய முடியாது. வாழ்க்கையை நிர்ணயம் செய்வது மார்க் அல்ல.

மார்க் எடுக்கவில்லை என்பதற்காக சிலர் விபரீத முடிவு எடுப்பது வருந்ததக்கது. தேர்வில் மார்க் வரவில்லை என்பதால் வாழ்க்கையில் வெற்றியடைய மாட்டோம் என்ற மனப்பான்மையை போக்க வேண்டும். மார்க், ரேங்க் கொடுப்பதால் சிறுவயதிலேயே தேவையில்லாத போட்டி, மனஉளைச்சல் வரும். வாழ்க்கைக்கு தேவையான யுத்திகளை கற்றுத்தர வேண்டும். தமிழ் அல்லது பிற மொழிகளில் சரளமாக பேச இன்னும் நம் மாணவர்கள் தடுமாறுகின்றனர். பொது விஷயம் குறித்து ஒரு பக்கத்தில் எழுத முடியாத நிலையே உள்ளது. புரிந்து கொண்டு படிக்க வேண்டும். வாசிக்கும் பழக்கம் மேம்படவும், சரளமாக பேசவும், எழுதவும் செய்திதாள்களை தினமும் படிக்க வேண்டும். நூலகம் சென்று உங்களுக்கு பிடித்ததை படியுங்கள்.

செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால் வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டது. தெளிவாக பேச, எழுத கற்றுக்கொள்ள வேண்டும். ஆங்கில புலமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இப் பள்ளி பிளஸ் 2வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது பாராட்டக்கூடியது. பெண்கள் பிளஸ் 2வுடன் படிப்பை நிறுத்தி விடக்கூடாது. கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டும். யாரையும் சார்ந்து இருக்க கூடாது’ என்றார். நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள் பசும்பொன் மனோகரன், ராதா பாண்டியராஜன், ராம்குமார், ரத்தினம், அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post செய்தித்தாள் படித்தால் வாசிக்கும் பழக்கம் மேம்படும் கார்த்தி ப சிதம்பரம் எம்.பி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: