கண்டாச்சிபுரம் அருகே பெண் தர மறுத்த பெற்றோரை துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன் கைது

 

கண்டாச்சிபுரம், மே 19: கண்டாச்சிபுரம் அருகே பெற்றோரை நாட்டு துப்பாக்கியால் சுட்டு விட்டு தலைமறைவான வளர்ப்பு மகனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த கடையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (40), அதே கிராம எல்லையில் காப்புகாடு அருகிலுள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி கலையம்மாள் (32), இவர்களுக்கு 3 மகள்கள் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் பாரதி (23), என்பவரை கோவிந்தன் வளர்த்து வந்தார். வளர்ப்பு மகனான பாரதி கோவிந்தனுடன் சேர்ந்து விவசாயப் பணிகளை செய்து வந்துள்ளான்.

இதனிடையே கோவிந்தனின் மூத்த மகளை பாரதி ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். கடந்த 14ம் தேதி அந்தப் பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டபோது கோவிந்தன் மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த பாரதி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாட்டு துப்பாக்கியால், கோவிந்தன், கலையம்மாளை சுட்டுள்ளார். குறி தப்பியதால் கோவிந்தனின் தலையில் அரிவாளால் வெட்டி விட்டு காப்புக்காட்டுக்குள் தப்பியோடிவிட்டார்.தற்போது கோவிந்தன் சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மனைவி கலையம்மாள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

விழுப்புரம் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் காப்புக்காடு முழுவதும் தேடி வந்தனர். என்னை பிடிக்க வந்தால் சுட்டுவிடுவேன் என போலீசை மிரட்டினான். இந்நிலையில் மழவந்தாங்கல் மலை அடிவாரத்தில் தூங்கிக்கொண்டிருந்த பாரதியை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் அரிவாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கண்டாச்சிபுரம் அருகே பெண் தர மறுத்த பெற்றோரை துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன் கைது appeared first on Dinakaran.

Related Stories: