பாசன வாய்க்கால்-பாலம் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

 

கோவை, மே 19: தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகாவில் உள்ள பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு உட்பட்ட அரியாபுரம் மற்றும் பெரியணை வாய்க்கால் ஜீப்பாதை மற்றும் பாலம் சீரமைக்க கடந்த 14.09.2020 அன்று மனு அளித்தோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இடைப்பட்ட இரண்டு ஆண்டு காலத்தில் விவசாயிகளின் பங்களிப்பின் மூலம் மேடு, பள்ளங்களில் மண் கொட்டி தற்காலிகமாக சீரமைத்தோம். ஆனாலும், மேற்கண்ட வாய்க்கால் பாதைகளில் அதிகளவு மேடு, பள்ளம் உருவாகியுள்ளது.

இதனால், விவசாயிகள் சென்று, வருவது மிகவும் சிரமமாக உள்ளது. மேலும், அரியாபுரம் மற்றும் பெரியணை வாய்க்கால் பாதையை இணைக்கும் பாலம் 1975-ம் ஆண்டு பொதுமக்கள் பங்களிப்பு மூலம் கட்டப்பட்டது. தற்போது இது மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த பாலம், அன்றைய காலத்திற்கு ஏற்ப 5.5 அடி அகலம் மற்றும் 10 அடி நீளம் உள்ளது. தற்போதைய சூழலுக்கு ஏற்ப, கூடுதலாக 4 அடி அகலப்படுத்த வேண்டியுள்ளது. இந்த பாலத்தை அகலப்படுத்திக்கொடுக்க வேண்டும். ஆழியார் அணையில் இருந்து மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு, மண் எடுத்து வருகின்றனர். எனவே, தற்காலிகமாக பொதுப்பணி துறை மூலம் மேடு, பள்ளங்களுக்கு மண் கொட்டி சமன் செய்து தரும்படி வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

The post பாசன வாய்க்கால்-பாலம் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: