ஒரே ஆண்டில் ஐஏஎஸ் தேர்ச்சி ; ஒரே நேரத்தில் கலெக்டர் ராமநாதபுரம், சிவகங்கை ஆட்சியர்களான கேரள தம்பதி: அரசின் நம்பிக்கையை நிறைவேற்றுவோம் என பெருமிதம்

சென்னை: ஒரே ஆண்டில் ஐஏஎஸ் ஆக தேர்வாகி, முதல்முறையாக கலெக்டர் ஆன கேரள தம்பதிக்கு அருகருகே மாவட்டமான ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 16 கலெக்டர்கள் உள்பட 48 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று முன்தினம் இடமாற்றம் செய்யப்பட்டனர். அருகருகே உள்ள மாவட்டங்களான ராமநாதபுரம் கலெக்டராக விஷ்ணுசந்திரன், சிவகங்கை கலெக்டராக ஆஷா அஜித் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கணவன், மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இருவருமே 2015 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகள். ஆஷா அஜித், கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்தவர். இவர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் துணை கலெக்டராக பணிபுரிந்துள்ளார். பின்னர் நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக இருந்துள்ளார்.

ஆஷா அஜித்தின் கணவர் விஷ்ணு சந்திரனும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் நாகர்கோவில் துணை ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வருவாய் கோட்டாட்சியராகவும் இருந்துள்ளார். நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக ஆஷா அஜித் பணியாற்றிய போது விஷ்ணுசந்திரன் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பணியாற்றினார். தற்போது இவர் ராமநாதபுரம் மாவட்டக் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அருகருகே உள்ள மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கையில் கணவன், மனைவி இருவரும் கலெக்டர்களாக பொறுப்பேற்க இருக்கும் இந்தத் தம்பதிக்கு 3 வயதில் பத்மா என்ற பெண் குழந்தை உள்ளது.

கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள ஆஷா அஜித் கூறுகையில், ‘‘நாங்கள் இருவருமே முதல் முறையாக கலெக்டர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளோம். இது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அது மட்டுமின்றி, எங்களுக்கான பொறுப்பையும் அதிகமாக்கி இருக்கிறது. எங்களை போன்று பல தம்பதிகள் உயர் அதிகாரிகளாக பணிபுரிகிறார்கள். குடும்பம் நடத்துவதை இருவரும் சிரமமாக கருதுவதில்லை. அருகருகே உள்ள மாவட்டங்களில் பணிபுரிவதால் அவசர தேவைகளுக்கு இருவரும் எளிதாக சந்தித்து கொள்ள முடியும். அரசு எங்களை நம்பி இந்தப் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. அந்த நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் சிறப்பாக பணியாற்றுவோம்’’ என்றார்.

The post ஒரே ஆண்டில் ஐஏஎஸ் தேர்ச்சி ; ஒரே நேரத்தில் கலெக்டர் ராமநாதபுரம், சிவகங்கை ஆட்சியர்களான கேரள தம்பதி: அரசின் நம்பிக்கையை நிறைவேற்றுவோம் என பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: