நெல்லை டவுனில் `வாகன காப்பகமாக’ மாறிய பஸ் நிறுத்தம்-பயணிகள் பரிதவிப்பு

நெல்லை : நெல்லை டவுனில் பஸ் நிறுத்தம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்கள் அழகுபடுத்தப்பட்டு மிளிர்கின்றன. மாநகரின் பல்வேறு இடங்களில் பஸ் நிறுத்தங்கள், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி நெல்லை டவுன் வடக்கு மவுண்ட் ரோடு நயினார்குளம் சாலையில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் வசதிக்காக புதிய பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலரும் நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட், நெல்லையப்பர் கோயில் மற்றும் டவுனிலுள்ள கடை வீதிகளுக்கு பஸ்கள் மூலம் வந்து செல்கின்றனர். இந்நிலையில் டவுன் வடக்கு மவுண்ட் ரோடு நயினார்குளம் சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் முன்பு ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வாகன காப்பகமாக காட்சி அளிக்கிறது.

இதுபோல் அருகில் ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளதால் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் சிலர் தங்களது வாகனங்களை பஸ் நிறுத்தம் பகுதியிலேயே நிறுத்திச் செல்கின்றனர்.
இதனால் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் வந்து செல்வதில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தும் கர்ப்பிணிகள், முதியவர்கள் பஸ்சுக்காக காத்திருக்கும் நேரத்தில் ஓய்வெடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்கும் வகையில் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை பஸ் நிறுத்தம் பகுதியில் நிறுத்தி வைப்பதை தவிர்த்து சாலையோரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நிறுத்த வேண்டும். இதுதொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post நெல்லை டவுனில் `வாகன காப்பகமாக’ மாறிய பஸ் நிறுத்தம்-பயணிகள் பரிதவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: