நங்கவரம் அருகே பழமை வாய்ந்த குறுகிய காட்டுவாரி பாலம்-தட்டுத்தடுமாறி செல்லும் வாகனங்கள்

குளித்தலை : கரூர் மாவட்டம் நங்கவரம் பேரூராட்சி வாரிக்கரை அருகே போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் குறுகிய காட்டுவாரி பாலத்தை உயர்த்தி அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த நங்கவரம் பேரூராட்சி பகுதியில் உள்ள வாரிக்கரை அருகே காட்டுவாரி பாலம் உள்ளது. இப்ப பாலம் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. அப்பொழுது அதிக போக்குவரத்து இல்லாத காரணத்தினால் இந்த குறுகிய பாலத்தில் அனைத்து வாகனங்களும் வந்து சென்றன.

தற்போது இந்த காட்டுவாரி பாலம் வழியாக குளித்தலை, பெட்டவாய்த்தலை, திருச்சாப்பூர், பொய்யாமணி, மேல் நங்கவரம், நங்கவரம், தமிழ் சோலை வழியாகவும் மற்றொரு மார்க்கமான திருச்சி மெயின்காட் கேட்டில் இருந்து முத்தரசநல்லூர், ஜீயபுரம், எலம்பனூர், திருப்பராய்த்துறை, பெருகமணி, நங்கவரம் வழியாக வாகனங்கள் செல்கிறது. மேலும் நச்சலூர், நெய்தலூர், கவுண்டம்பட்டி குழு மணிக்கு செல்வதற்கு இந்த பாலம் வழியாகத்தான் அரசுத்துறை அதிகாரிகள், தனியார் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், பேருந்துகள், பள்ளி கல்லூரி வாகனங்கள் தினந்தோறும் சென்று வருகின்றன.

அதேபோல் எதிர் மார்க்கத்தில் குழுமணி, கவுண்டம்பட்டி, நெய்தலூர் காலனி, நச்சலூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் குளித்தலைக்கோ, திருச்சிக்கோ செல்ல வேண்டும் என்றால் இந்த காட்டு வாரி பாலத்தை தான் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. தற்போது கூடுதலாக வாகன போக்குவரத்து நடைபெறுவதால் எதிரே ஒரு வாகனங்கள் வழி விடுவதற்கு வழியில்லாமல் குறுகிய பாலத்தில் அனைத்து வாகனங்களும் தடுமாறி செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.

மழைக்காலங்களில் மேற்குப் பகுதியில் இருந்து காட்டுவாரி பாலத்தில் தண்ணீர் நிரம்பி வழியும் சூழ்நிலை ஏற்படும் போது இந்த காட்டு வாரி பாலத்தை நீர் மூழ்கி செல்லும் நிலையும் ஏற்படும் அப்பொழுது வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இவ்வழியே நெற்பயிர்கள் அறுவடை நேரத்தில் வாகனத்தில் எடுத்துச் செல்கின்றனர்.

அதேபோல் சுற்றுவட்டார விவசாயிகள் கரும்பு வெட்டி கரும்பு ஆலைக்கு எடுத்துச் செல்ல இந்த காட்டு வாரி பாலத்தை தான் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் இப்பாலம் குறுகிய பாலமாக இருப்பதாலும், பழமை வாய்ந்த பாலமாக இருப்பதாலும் போக்குவரத்துக்கு மிகுந்த இடையூறாக இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு நங்கவரம் காட்டு வாரி குறுகிய பாலத்தை அகலப்படுத்தி கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post நங்கவரம் அருகே பழமை வாய்ந்த குறுகிய காட்டுவாரி பாலம்-தட்டுத்தடுமாறி செல்லும் வாகனங்கள் appeared first on Dinakaran.

Related Stories: