அவருக்கு நேரம் நல்லா இருந்திருக்கு… கும்பிடு போட்ட கான்ட்ராக்டர் சாந்தமாக பின்வாங்கிய யானை: வீடியோ வைரல்

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் உணவு, தண்ணீர் தேடி யானை உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் வருகின்றன. கொம்பன் யானை ஒன்று, பென்னாகரம்-ஒகேனக்கல் சாலையோரம் முகாமிட்டவாறு, அப்பகுதியில் கிடைக்கக் கூடிய இலை தழைகளை சாப்பிட்டு அங்கேயே சுற்றித்திரிகிறது. நேற்று முன்தினம் அந்த யானை சாலைக்கு வந்தபோது, அவ்வழியாக சென்ற பென்னாகரம் அருகே எட்டிக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த கான்ட்ராக்டரும், டிராக்டர் டீலருமான முருகேசன் (45) என்பவர் வண்டியை நிறுத்தி, சாவகாசமாக அந்த யானையின் அருகில் நடந்து சென்றார்.

பின்னர், இரண்டு கைகளையும் தூக்கி கூப்பியவாறு யானையிடம் சரண்டர் ஆவது போல போஸ் கொடுத்து சாஷ்டாங்கமாக பெரிய கும்பிடு போட்டார். வழக்கமாக யானைகள் மனிதர்களை துரத்தும். அல்லது மனிதர்களை தாக்கும். ஆனால், அந்த யானையோ எதுவும் செய்யாமல், முருகேசன் செய்த சேட்டையை கண்டு சற்று பின்வாங்கியவாறு சாதுவாக நின்றது. யானைக்கு மறுபடியும் கும்பிடு போட்ட முருகேசன், சாவகாசமாக அங்கிருந்து நடையை கட்டினார். அதனை காரில் வந்த அவரது நண்பர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

The post அவருக்கு நேரம் நல்லா இருந்திருக்கு… கும்பிடு போட்ட கான்ட்ராக்டர் சாந்தமாக பின்வாங்கிய யானை: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: