உச்சநீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தாமாக முன் வந்து பதவி விலக வேண்டும்: உத்தவ் தாக்கரே பேட்டி

மும்பை: எந்த முகாந்திரமும் இல்லாமல் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டது தவறு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை முன்னாள் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வரவேற்றுள்ளார். உச்சநீதிமன்றம் இந்த உத்தரவால் ஏக்நாத் ஷிண்டே தாமாக முன் வந்து பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சிவசேனா கட்சியின் கொறடா உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏக்களுக்கு எதிராக அப்போதைய துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.

இந்த தகுதி நீக்க நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதேபோல் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட்டதை எதிர்த்தும், ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்ததை எதிர்த்தும் உத்தவ் தாக்கரே வழக்கு தொடுத்தார். இந்நிலையில், 16 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில், சிவசேனா கட்சியின் கொறடாவாக ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த கோகவாலேவை நியமித்த சபாநாயகரின் முடிவு சட்டவிரோதமானது என தலைமை நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இதனை தொடர்ந்து மும்பையில் பேட்டியளித்த மராட்டிய மாநில முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சட்ட விரோதமாக ஏக்நாத் ஷிண்டே தரப்பு ஆட்சி அமைத்து நடத்தி வருகிறது என்று குற்றம் சாட்டினார். ஏக்நாத் ஷிண்டே பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்த உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சிக்கு ஏக்நாத் ஷிண்டே துரோகம் இழைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளார். முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்து விட்டதால் மீண்டும் அவரது அரசை நிறுவ உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இதனை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் வரவேறுள்ளனர். நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். மஹாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விரிவான அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளதை ஏக்நாத் ஷிண்டே தரப்பு வரவேற்றுள்ளது. இதனால் மராட்டிய மாநிலம் நிலையான அரசை பெரும் என்று ஷிண்டே அணியை சேர்ந்த ராகுல் ரமேஷ் கூறியுள்ளார்.

The post உச்சநீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தாமாக முன் வந்து பதவி விலக வேண்டும்: உத்தவ் தாக்கரே பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: