சாகுபடி நிலங்களை வளமாக்க கோடை உழவு செய்ய வேண்டும்: விதைச்சான்று அலுவலர் தகவல்

மண்டபம், மே 11: கோடை உழவு செய்து சாகுபடி நிலங்களை வளமாதாக மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என ராமநாதபுரம் விதைச்சான்று அலுவலர் சிவகாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கோடை உழவின் முக்கியத்துவத்தை விவசாயிகள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். கோடை மழையை பயன்படுத்தி. மானாவாரி நிலத்தில் சரிவிற்கு குறுக்காக கடைசி உழவு அமையுமாறு உழுவதே கோடை உழவு ஆகும். இதனால் மழை நீர் மண்ணுக்குள் இழுக்கப்பட்டு நீண்ட காலம் தேங்கி மண்ணின் ஈரத்தன்மையை அதிகரிக்கும். நெல் அறுவடைக்கு பின் களிமண் சுருங்குவதால் ஆழமான வெடிப்பு ஏற்பட்டு நிலத்தின் அடிமண்ணில் இருந்த ஈரம் ஆவியாகிறது. நான்கு அல்லது ஐந்து மாதங்கள் கழித்து இந்நிலத்தில் நெல் சாகுபடி செய்ய நீர் பாய்ச்சும் பொழுது நீர் வேர் உறிஞ்சும் மட்டத்திற்கு கீழே சென்று விடுகிறது.

இதனால் நிலத்தை தயார்படுத்த அதிக அளவு கால்வாய் நீர் தேவைப்படுகிறது. நீர் விரயமாவதுடன் நிலம் தயார் செய்ய நீண்டு நாட்கள் ஆகும். இந்த பிரச்னைகள் இல்லாமல், மண் வளத்தைக் காக்க, நடவு நிலத்தை தயார் செய்ய, நீரின் தேவையை குறைக்க அடிமண் இறுக்கம் அகன்று நீரின் கொள்திறன் அதிகரிக்க மண்ணுக்கடியில் காணப்படும் கூட்டுப்புழுக்களை மேற்பரப்பில் தள்ளியெடுத்து பறவைகளுக்கு இரையாக்க வேண்டும். மேலும் மண்ணை உதிரியாக வைப்பதற்கும் இந்த உழவு உதவுகிறது.
கோடை உழவு செய்யாத நிலங்களில் களைகளின் பெருக்கம் அதிகமாகி, மண்ணிலுள்ள நீர் மற்றும் சத்துகளை உறிஞ்சிவிடும். அடுத்த பயிர் சாகுபடியில் அதிக களை முளைத்து பயிர் சேதம், சாகுபடி செலவு அதிகமாகும். அருகு, கோரை, கண்டங்கத்தரி, காட்டு கண்டங்கத்தரி, பார்த்தீனியம். மஞ்சக்கடுகு. நாயுருவி. தொய்யாக்கீரை, பண்ணைக் கீரை உள்ளிட்ட களைகள் அதிகமாக உற்பத்தியாகும். கோடை உழவு செய்வதால் இக்களைகளின் பெருக்கம் வெகுவாக குறைகிறது. பயிர் அறுவடைக்குப்பின் எஞ்சிய கட்டைப்பயிர் பெரும்பாலான பூச்சிகள், நோய்க்கிருமிகளுக்கு உணவு மற்றும் உறைவிடமாக மாறுவதுடன், இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் அமைகிறது. எனவே கோடை உழவு செய்வதால் இந்த கட்டைப்பயிர் உரமாகி, நுண்ணுயிர்களுக்கு உணவாகி மண்வளத்தை கூட்டுகிறது. மண்ணில் காற்றோட்டம் அதிகமாகி, நுண்ணுயிர் எண்ணிக்கை பெருகி மண்வளமாகிறது. ராமநாதபுரம் மாவட்ட உழவர்கள் அனைவரும் கோடை உழவு செய்து சாகுபடி நிலங்களை வளமானதாக மேம்படுத்தி கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

The post சாகுபடி நிலங்களை வளமாக்க கோடை உழவு செய்ய வேண்டும்: விதைச்சான்று அலுவலர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: