வெள்ளை மாளிகையில் விருந்து ஜூன் 22ம் தேதி அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பைடன் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ஜூன் 22ம் தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு அவருக்குவெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அந்த நாட்டு அதிபர் பைடன் பலமுறை அழைப்பு விடுத்தார். அதை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டுள்ளார். பைடன் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ஜூன் 22ம் தேதி அமெரிக்கா செல்கிறார். இதை அமெரிக்க அதிபர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசு முறை பயணமாக ஜூன் 22ம் தேதி அமெரிக்கா வர இருக்கும் பிரதமர் மோடிக்கு, அதிபர் பைடன் வெள்ளை மாளிகையில் சிறப்பு விருந்து அளித்து கவுரப்படுத்த உள்ளார். அவரது வருகை அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஆழமான, நெருக்கமான நட்பை உருவாக்கும். மேலும் அமெரிக்கர்களையும் இந்தியர்களையும் ஒன்றாக இணைக்கும் நட்பின் அன்பான பிணைப்புகளை உறுதிப்படுத்தும்.

பிரதமர் மோடியின் வருகை சீனாவின் ஆக்ரோஷமான நடத்தைக்கு மத்தியி பாதுகாப்பான இந்தோ-பசிபிக்கிற்கான இரு நாடுகளின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும். பாதுகாப்பு, சுத்தமான எரிசக்தி மற்றும் விண்வெளி உள்ளிட்ட தொழில்நுட்ப கூட்டாண்மையையும் இந்த விஜயம் மேம்படுத்தும். கல்வி, காலநிலை மாற்றம், சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்துவார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் இந்தியா நடத்தும் ஜி20 மாநாட்டிற்கு முன்னதாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல இருக்கிறார். ஏற்கனவே 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதமும் அவர் அமெரிக்கா சென்றார். தற்போது மீண்டும் செல்ல உள்ளார். அதற்கு முன்னதாக மே 24ம் தேதி சிட்னியில் நடக்கும் குவாட் உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பைடனுடன் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிட்னிக்கு செல்வதற்கு முன், மே 19 முதல் 21 வரை நடைபெற உள்ள ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மோடி ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்குச் செல்வார். அப்போதும் அவர் பைடனை சந்தித்து பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post வெள்ளை மாளிகையில் விருந்து ஜூன் 22ம் தேதி அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: