அரியலூர் மாவட்டத்தில் ஒன்றிய அரசை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் நடை பயணம்

 

அரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமானூர் பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிய பாஜக அரசை அகற்றிட வேண்டி நேற்று நடைப் பயணம் மேற்கொண்டனர். ஒன்றிய ஆளும் பாஜக அரசு, தேர்தல் வாக்குறுதிப்படி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை அளிக்காததை கண்டித்தும், ஜிஎஸ்டி வரி மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை சீரழித்ததை கண்டித்தும், ஏழை, எளிய மக்களை பெரிதும் பாதிக்கும் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயர்வு, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும், விவசாயிகளின் விரோத ஒன்றிய பாஜக ஆட்சியை அகற்றிட வேண்டியும் இந்த நடைப்பயணம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார்.

மாவட்டக் குழு உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலர் கலியபெருமாள், ஒன்றியப் பொருளாளர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் ராமநாதன் நடைபயண இயக்கத்தை தொடங்கி வைத்தார். நடைபயணமானது, திருமானூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி கீழக்கொளத்தூர், வடுகபாளையம், குமாரபாளையம், விழுப்பணங்குறிச்சி, சுள்ளங்குடி, ஏலாக்குறிச்சி, கோவிலூர், செட்டிக்குழி, காமரசவல்லி, மாத்தூர் வழியாக சென்று குருவாடி கிராமத்தில் முடிவடைந்தது. மேற்கண்ட கிராமங்களில் பாஜக அரசின் மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு கட்சியினர் எடுத்துக் கூறினர்.

The post அரியலூர் மாவட்டத்தில் ஒன்றிய அரசை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் நடை பயணம் appeared first on Dinakaran.

Related Stories: