தேர்தல் வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

கரூர்: கரூர் மாநகராட்சியில் உள்ள தனியார் மஹாலில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் (தி ரைசிங் சன்) கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளார். மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைப்பது சாதாரண காரியம் அல்ல. காரணம், 2021ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் நிதிநிலை மிக மோசமாக இருந்தது. அந்தளவுக்கு கடந்த காலங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் உருவாக்கி விட்டு சென்றார்கள்.

அப்படிப்பட்ட சூழலில் ஆட்சி பொறுப்பேற்று நிதி நிலையை ஓரளவு சரி செய்து, தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை 85 சதவீதம் முதல்வர் நிறைவேற்றி தந்துள்ளார்கள். இங்கே மாணவ, மாணவிகள் வருகை தந்துள்ளீர்கள். உள்ளபடியே தமிழ்நாட்டின் முதல்வருக்கு கீழ் எத்தனை துறைகள் இருந்தாலும் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கான நிதிகளை வழங்கக் கூடியவர் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின். இங்கு வந்துள்ள கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மிகச் சிறப்பாக முதல்வரின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு கொண்டுள்ளார். இன்று கரூர் மாவட்டத்திற்கு இந்த நல்ல நாளில், வருகை தந்து, நிகழ்ச்சியை நடத்துவதற்கு நன்றி. இதோடு, தமிழக முதல்வர் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளுக்கு நமது மாவட்டத்தில் இருந்து வந்துள்ள மாணவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

The post தேர்தல் வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: