நன்றி குங்குமம் தோழி
‘‘இன்று திருமணம்… ஒரே வருடத்தில் இவர் எனக்கு செட்டாகல… அதனால் விவாகரத்து பெறுகிறோம் என பல ஜோடிகள் குடும்ப நல நீதிமன்ற படியினை ஏறுகிறார்கள். திருமண பந்தம் இருவரை இணைப்பது மட்டுமில்லை. இரண்டு குடும்பங்களை இணைப்பது. சொல்லப்போனால் குடும்ப நல நீதிமன்றங்களில் விவாகரத்தான வழக்குகள் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு சந்தோஷமா வாழ ஒவ்வொரு கணவனும் மனைவி பிரசவத்தில் தவிக்கும்போது குழந்தை பிறக்கும் வரை அவளுடன் இருக்க வேண்டும். அப்பதான் விவாகரத்து வழக்குகள் குறையும்’’ என்கிறார் வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான அதிசயா.
இவர் ஆலந்தூர் ரோட்டரி கிளப், மக்கள் அமைப்பு சங்கம், சமூக நீதி வழக்கறிஞர் சங்கம், தேசிய ஊடகவியலாளர் சங்கம், தென்னிந்திய ஊடக கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் லீகல் அட்வைசராகவும், உறுப்பினராகவும், ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். குடும்பநலம், சிவில், கிரிமினல், நுகர்வோர் என அனைத்து விதமான வழக்குகளையும் கையாள்கிறார். கடந்த 12 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
‘‘மயிலாடுதுறையில் உள்ள கருவாழக்கரை மேலையூர்தான் என்னுடைய ஊர். என் தாத்தா சுப்பிரமணியன், அவருக்கு ஒரு பழக்கம் உண்டு. விவசாய நிலத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலையின்போது தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால் அவர்களுக்கு இலவசமாக மருந்துகளை கொடுப்பார். இதற்காகவே வாரந்தோறும் மாயவரம் சென்று விஷமுறிவு மருந்துகளை வாங்கி வருவார். காரணம், விஷம் உடலில் பரவுவதற்குள்ளாகவே கொடுத்தால்தான் காப்பாற்ற முடியும். கொஞ்சம் தாமதித்தாலும் ஆளைக் கொன்றுவிடும். அதனாலேயே அந்த மருந்துகளை வீட்டில் எப்போதும் வைத்திருப்பார்.
சமூகத்திற்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும் என்று நாம் இப்போது பிரசாரம் செய்கிறோம். இதெல்லாம் அவருக்கு தெரியாது. அவரைப் பொறுத்தவரை ஏழை எளியவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியினை செய்ய வேண்டும் அவ்வளவுதான். அவர்தான் எனக்கு இம்ப்ரஷன். என் அப்பா தபால் துறையில் போஸ்ட் மாஸ்டராக இருந்தார். அவருக்கு என்னை வழக்கறிஞராக பார்க்க வேண்டும்னு ஆசை. என் தாத்தாவின் சேவையை தொடரவும், என் தந்தையின் கனவை பூர்த்தி செய்யவே நான் வழக்கறிஞர் பணியை தேர்வு செய்தேன். என்னுடைய மகனையும் வழக்கறிஞராகவே தயார்படுத்தி வருகிறேன்’’ என்றவர் பெண்களுக்கான சட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து ஆலோசனை வழங்கி வருகிறார்.
‘‘பெண்களுக்கு அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதை எப்படி பெறுவது என்று அவர்களுக்கு தெரிவதில்லை. மகளிர் குழுக்களில் இணைந்து கடன் பெறுவது, கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கான அரசு வேலை, விதவை பெண்களுக்கான சலுகைகள்… இது போன்றவற்றை எவ்வாறு பெற வேண்டும், விண்ணப்பிக்கும் முறை, தேவையான ஆவணங்கள் குறித்து ஆலோசனை வழங்கி வருகிறேன். பொதுவாக பெண் வழக்கறிஞர்கள் என்றால் குடும்ப நல வழக்கு மட்டுமில்லை, சிவில், கிரிமினல் வழக்குகளையும் கையாள்கிறேன். பெண்களுக்காக சட்ட உதவி குறித்து உதவி செய்ய வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.
பெண்களுக்கு சுதந்திரம் என்பது பொருளாதாரம் சார்ந்து மட்டுமல்ல, சட்ட விழிப்புணர்வும் அவர்களுக்கு தேவை. நாம் செய்யும் தொழிலிலேயே 10% பிறருக்கு உதவி செய்தாலே நாடு நல்ல முன்னேற்றத்தை நோக்கி செல்லும். அதை விட்டு விட்டு சமூகத்தை குறை சொல்வதை விட்டுவிடுங்கள். நானும் சமூக மேம்பாட்டிற்காக பொதுநல வழக்குகளை தாக்கல் செய்ய தயார் செய்து வருகிறேன்.
அதில் முக்கியமானது பெண்களுக்கான பொதுநல வழக்குகள். பெண்களுக்கு ஏற்படும் வன் கொடுமை மற்றும் வரதட்சணை கொடுமையை தடுக்க ஒரே வழி ஆண்களை பிரசவ அறையில் அனுமதிக்கவேண்டும் என்பதே. குழந்தை பெறும்போது மனைவி படும் பெரும் துயரத்தை கணவன் நேரடியாக பார்த்தாலே அவனுடைய மனோபாவம் மாறிவிடும். விவாகரத்து வழக்குகள் குறையும். தனது பிள்ளைக்காக மனைவியின் பரிதவிப்பு மனதில் பதிந்தாலே ஆண்களின் ஆணாதிக்க மனப்போக்கு மாறும்’’ என்று கூறும் அதிசயா, மிஸ் கான்பிடன்ஸ், சிறந்த சமூக சேவகி, பாவாணர், கலைவாணர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
தொகுப்பு : ஜோதி
The post ஆண்களை பிரசவ அறையில் அனுமதிக்க வேண்டும்! appeared first on Dinakaran.