வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் நாளை புயலாக மாறும்

சென்னை: வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மாறும். நாளை அது அந்தமான் கடல் பகுதியில் புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அத்துடன் வங்கக் கடலில் தென் கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்தம் நேற்று வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வுகளின் காரணமாக தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை நேற்று பெய்தது. இதுதவிர கோவை, தர்மபுரி, ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருநெல்வேலி, கடலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் இயல்பைவிட -4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை குறைந்து காணப்பட்டது. அதே நேரத்தில் தஞ்சாவூர், சென்னை, கரூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக காணப்பட்டது.

இதையடுத்து இன்று முதல் 12ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறும். இது நாளை மேலும் வலுப்பெற்று அந்தமான் கடல் பகுதிக்கு நகர்ந்து புயலாக மாறும். அதனால் அந்த பகுதியில் மணிக்கு 60 கிமீ வேகம் முதல் 70 கிமீ வேகம் வரை சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் நாளை புயலாக மாறும் appeared first on Dinakaran.

Related Stories: