சிற்பமும் சிறப்பும்-ஏழூர் பல்லக்கு

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருவையாறு சப்தஸ்தான விழா

சிவபெருமானின் மீது ஈடு இணையற்ற பக்தி கொண்ட நந்திதேவருக்கு, ‘சுயசாம்பிகை’ என்ற பெண்ணை மண முடிக்க இறைவனே ஏற்பாடு செய்தார்.நந்திதேவரின் திருமண வைபவத்தை ஒட்டி நடைபெறும் இந்த விழாவின் சிறப்பு குறித்து, ‘‘நந்தி கல்யாணம் தரிசித்தால் முந்தி கல்யாணம்” என்னும் சொல் வழக்கு நிலவி வருகிறது.

சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று (மே 6,2023), தமிழகத்தில் மிகவும் பழமைவாய்ந்த சிவ ஆலயமாகக் கருதப்படும் திருவையாறு இறைவன் ஸ்ரீபஞ்சநதீஸ்வரரும் (ஐயாறப்பர்), அறம் வளர்த்த நாயகியும், மணக்கோலத்தில் இருக்கும் நந்திகேஸ்வர், சுயசாம்பிகையை அலங்கரிக்கப்பட்ட வெட்டிவேர் பல்லக்கில் அருகில் உள்ள திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந் துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ‘சப்தஸ்தான’ திருத்தலங்களுக்கு அழைத்துச்செல்வர்.

நடைப்பயணமாக பல்லக்குகள் செல்லும் வழியெல்லாம் வீட்டின் முன்நின்று, தம்மைத் தேடி வரும் இறைவனின் பல்லக்குகளை காத்திருந்து எதிர்கொண்டு மக்கள் அழைப்பர்.
பக்தர்களின் தாகம் தீர்க்க பானகம் வழங்குதல், அன்னதானம், இரவு வாணவேடிக்கை என இத்திருவிழா மிகச்சிறப்புற நடைபெறும்.

திருப்பழனம் (இறைவன் ஆபத்சகாயேஸ்வரர் – இறைவி பெரிய நாயகி)
திருச்சோற்றுத்துறை (இறைவன் சோற்றுத்துறையப்பர் – இறைவி அன்னபூரணி)
திருவேதிக்குடி (இறைவன் வேதபுரீஸ்வரர் – இறைவி மங்கையர்க்கரசி)

திருக்கண்டியூர் (இறைவன் பிரம்மகண்டீசுவரர் – இறைவி மங்கலநாயகி)
திருப்பூந்துருத்தி (இறைவன் புஷ்பவனநாதர் – இறைவி சௌந்தரநாயகி)
திரு நெய்த்தானம் (இறைவன் நெய்யாடியப்பர் – இறைவி வாலாம்பிகை)

என, ஒவ்வொரு தலத்திலும், அந்தந்த கோயிலிலுள்ள இறைவனும், இறைவியும் உள்ள பல்லக்குகள் இப்பல்லக்குடன் சேர்ந்துகொள்கின்றன. ஆறு தலங்களுக்கும் சென்றுவிட்டு, முடிவில் முதன்மைத்தலமான திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்துக்கு திரும்புவர். அங்கு ‘பூச்சொரிதல்’ நடைபெறும். விழாவின் இறுதியில் பல்லக்குகள் மீண்டும் அந்தந்த ஊர் ஆலயங்களுக்குத் திரும்பிச் செல்கின்றன.

The post சிற்பமும் சிறப்பும்-ஏழூர் பல்லக்கு appeared first on Dinakaran.

Related Stories: