சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதா? கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் விசாரணை

கடலூர், மே 7: சிதம்பரம் சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதா என்பது குறித்து சென்னை மருத்துவ குழுவினர் கடலூர் அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, கடந்த 2022ம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோயிலின் பொது தீட்சிதர்கள், குழந்தை திருமணங்கள் செய்ததாக 8 பேர் மீது சமூக நலத்துறை அதிகாரிகள் புகார் கூறி நடவடிக்கை எடுத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகளின் பெற்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அது மட்டுமின்றி 6ம், 7ம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கன்னித்தன்மை பரிசோதனை செய்துள்ளனர் என்று கூறினார். ஆளுநரின் இந்த கருத்துக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரக கூடுதல் இயக்குநர் டாக்டர் விஸ்வநாதன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கடலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ரமேஷ்பாபு, இளநிலை நிர்வாக அதிகாரி கமலக்கண்ணன், கடலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் பரமேஸ்வரி ஆகியோர் சிதம்பரம் ஏஎஸ்பி அலுவலகத்துக்கு சென்று அங்கு ஏஎஸ்பி ரகுபதியிடம், குழந்தை திருமணம் தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இதை தொடர்ந்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்த இந்த குழுவினர், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்திற்கு சென்று சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றதா, மருத்துவ பரிசோதனை நடைபெற்றதாக கூறப்பட்ட நாளில் பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் யார், யார். எத்தனை சிறுமிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவின் விவரம் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் சமூக நலத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதற்காக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த விசாரணை முடிவுகள் வெளிவந்த பிறகு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதா இல்லையா என்பது குறித்த விவரம் தெரிய வரும். இதனால் கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

The post சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதா? கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: