தென்மேற்கு பருவமழை தொடங்கியது பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்வு அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை நீக்கம்

வி.கே.புரம் :  தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்தது. வெள்ளப்பெருக்கால் அகஸ்தியர் அருவியில் குளிக்க காலையில் விதிக்கப்பட்ட தடை மாலையில் நீக்கப்பட்டது.

 கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் சாரல் மழை பெய்ய தொடங்கி உள்ளது. பருவமழை முன்பே தொடங்கியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Advertising
Advertising

நேற்று முன்தினம் நெல்லை மாவட்ட வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் பாபநாசம் அகஸ்தியர் அருவி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி அகஸ்தியர் அருவியில் நேற்று காலை சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். பின்னர் மாலையில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே நீர்

பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் 19 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 8.40 அடி உயர்ந்து நேற்று காலை 27.40 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1376 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  19.68 அடியாக இருந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 8 அடி உயர்ந்து 27.49 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 875கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம், சேர்வலாறு ஆகிய இரு அணைகளிலும் இருந்து 459 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 70.59 அடியாக இருந்த மணிமுத்தாறு அணை நீர்மட்டம் சற்று உயர்ந்து நேற்று காலை 71.40 அடியானது. அணைக்கு 508 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழை தொடர வேண்டும், அப்போது தான் கார் பருவ நெல் சாகுபடியை தொடங்க முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மழைஅளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் 61 மிமீ, கீழ்அணை 8, சேர்வலாறு 17, கல்லிடைக்குறிச்சி 1.8, மணிமுத்தாறு 2.8, ராமநதி 15, கருப்பாநதி 14, குண்டாறு 20, கொடுமுடியாறு 15, அடவிநயினார் 65, ஆய்குடி 8.2, செங்கோட்டை 17, தென்காசி 10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Related Stories: