கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் இன்று அரவான் தேரோட்ட விழா: திருநங்கைகள் விதவைக்கோலம் பூண்டனர்; அரவான் திருப்பலி

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் இன்று காலை அரவான் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான திருநங்கைகள் விதவைக்கோலம் பூண்டு கதறி அழுதனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் 18 நாள் சித்திரை திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

தினந்தோறும் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில், நேற்று முக்கிய நிகழ்ச்சியான சாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள் தங்களை மணப்பெண் போல் அலங்கரித்துக்கொண்டு கோயில் பூசாரியிடம் தாலி கட்டிக் கொண்டு விடிய, விடிய கும்மி அடித்து உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

இன்று காலை சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. அரவான் தேரில் எழுந்தருளி வலம் வந்தார். உளுந்தூர்பேட்டை திமுக எம்எல்ஏ மணிக்கண்ணன் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். அப்போது தங்கள் வேண்டுதல் நிறைவேற ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் விவசாய நிலங்களில் விளைந்த விளைபொருட்களான மணிலா, கம்பு, மாங்காய், முருங்கை உள்ளிட்டவைகளை சூறைவிட்டு கூத்தாண்டவரை வழிபட்டனர். இந்தத் தேர் வாண வேடிக்கையுடன் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பந்தலடிக்கு சென்றது.

அங்கு அரவான் களப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கோயில் பூசாரியிடம் தாலி கட்டி இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்த திருநங்கைகள் அரவான் களப்பலியான துக்கம் தாங்காமல் தாங்கள் கட்டிய தாலியை அறுத்தும், வளையல்களை உடைத்தும், பொட்டை அழித்தும் ஒப்பாரி பாடல்களை பாடி ஓலமிட்டு அழுதனர். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள நீர் நிலைகளில் தலைமுழுகி, வெள்ளை புடவை உடுத்தி சோகத்துடன் தங்களது ஊருக்கு திரும்பினர்.

இன்று மாலை பலிச்சோறு படையலிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த சோற்றை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வாங்கி சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. நாளை விடையாத்தி நிகழ்ச்சியும், 5ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

The post கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் இன்று அரவான் தேரோட்ட விழா: திருநங்கைகள் விதவைக்கோலம் பூண்டனர்; அரவான் திருப்பலி appeared first on Dinakaran.

Related Stories: