ஓசூர் குறிஞ்சி நகரை சூழ்ந்த மழை நீர்

 

ஓசூர்: ஓசூர் குறிஞ்சி நகர் பகுதியில் சூழ்ந்த மழைநீரால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மழை பெய்தது. அதேபோல் ஓசூர் பகுதியில் 40 மி.மீ அளவில் மழை பெய்தது. இதனால், ஓசூர் குறிஞ்சி நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் நிரம்பி, மழை வெள்ள நீர் அங்குள்ள தெருக்கள் மற்றும் வீடுகளை சூழ்ந்து நின்றதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். அருகிலுள்ள பாரதிதாசன் நகர், கிருஷ்ணப்பா காலனி ஆகிய பகுதிகளில் உள்ள ஒட்டுமொத்த கழிவுநீரும் மழை வெள்ள நீரோடு சேர்ந்து, குறிஞ்சி நகரில் உள்ள வீடுகளை சூழ்ந்து நின்றது.

மேலும், பல்வேறு வீடுகளுக்குள்ளும் கழிவுநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. ஏராளமான வீடுகளில் கழிவுநீர் கால்வாய்களில் அடித்து வரப்பட்ட குப்பை கழிவுகள் தேங்கிக் கிடக்கிறது. கனமழை பெய்யும் சமயங்களில் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் கூறினர். எனவே, தங்கள் பகுதியில் சாக்கடைகளை சீரமைத்து, சுகாதார சீர்கேடுகள் ஏற்படாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஓசூர் குறிஞ்சி நகரை சூழ்ந்த மழை நீர் appeared first on Dinakaran.

Related Stories: