விழுப்புரத்தில் அழகி போட்டி சென்னை நிரஞ்சனா மிஸ்கூவாகம் பட்டத்தை தட்டி சென்றார்

விழுப்புரம், மே 3: கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் பிரசித்திபெற்ற கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரை திருவிழாவுக்காக பல்வேறு நாடுகள், மாநிலங்களிலிருந்து திருநங்கைகள் வருகை புரிவார்கள். பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், மிஸ்கூவாகம் அழகிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை சார்பில் மிஸ்கூவாகம் அழகிப் போட்டியின் முதல் சுற்று உளுந்தூர்பேட்டையில் நேற்று முன்தினம் பிற்பகல் நடைபெற்றது. மழை பெய்ததால் இறுதிச் சுற்று நிறுத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. முதல் சுற்றில் பங்கேற்ற 46 பேரிலிருந்து 16 பேர் இறுதிச் சுற்றுக்கு தேர்வு பெற்றனர். இவர்களில் ஒருவரைத் தவிர மற்ற 15 பேர் பங்கேற்றனர்.

இவர்களின் நடை, உடை, பாவனையின் அடிப்படையில், பெங்களூரு சுபாஷினி, சென்னை நிரஞ்சனா, சேலம் சாதனா, தூத்துக்குடி ரித்திகா, நவீனா, சென்னை சாம், டிஷா ஆகிய 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பல்வேறு கேள்விகளுக்கு அளித்த பதில்களின் அடிப்படையில், நடுவர்கள் திருநங்கை நடிகை மில்லா, காளி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க மேற்பார்வையாளர் பிரேமா ஆகியோர் இறுதி பட்டியலை அறிவித்தனர். 2023ம் ஆண்டுக்கான மிஸ்கூவாகம் அழகியாக சென்னையைச் சேர்ந்த நிரஞ்சனா தேர்வு செய்யப்பட்டார். 2ம் இடத்தை சென்னை டிஷா, 3ம் இடத்தை சேலம் சாதனா ஆகியோர் தட்டிச் சென்றனர். இவர்களுக்கு புகழேந்தி எம்எல்ஏ, தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் தலைவர் மோகனாம்பாள், செயலர் கங்கா ஆகியோர் கிரீடம் சூட்டி, பட்டம் அணிவித்து, வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நகர திமுக செயலாளர் சக்கரை மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post விழுப்புரத்தில் அழகி போட்டி சென்னை நிரஞ்சனா மிஸ்கூவாகம் பட்டத்தை தட்டி சென்றார் appeared first on Dinakaran.

Related Stories: