ஆணைமடுவு அணை கட்டும் திட்டம் சேர்வராயன் மலையடிவாரத்தில் அதிகாரிகள் நேரில் ஆய்வு

 

பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி அருகே, ஆணைமடுவு அணை கட்டும் திட்டம் தொடர்பாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.பொம்மிடி அருகே சேர்வராயன் மலையடிவாரத்திலிருந்து வேப்பாடி ஆறு உற்பத்தியாகும் இடத்தில், ஆணைமடுவு அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பாமக எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் சட்டமன்றத்தில் பேசினார். இதனை தொடர்ந்து, பொதுப்பணி துறை அரூர் உதவி செயற்பொறியாளர் ஆசாம் பாஷா, உதவி பொறியாளர் முருகன் ஆகியோர், பொம்மிடி அருகே சேர்வராயன் மலை அடிவாரத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் திட்டம் குறித்து எடுத்துரைத்தனர். ஆணைமடுவு திட்டம் நிறைவேறினால், சேலம் மாவட்டத்தில் 2 ஊராட்சிகள் மற்றும் கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி ஒன்றியங்களில் 32 ஊராட்சிகள் பொ.மல்லாபுரம், கடத்தூர் பேரூராட்சிகள் என 150க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் அப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றனர். அப்போது, அப்பகுதியில் 1941ம் ஆண்டு கட்டப்பட்ட சிறிய தடுப்பணை, நீர் வரும் பாதைகள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின் போது, பாமக மாவட்ட செயலாளர் அரசாங்கம், கணவாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் குமுதா ரத்தினம், மூன்றாம் கரம் அறக்கட்டளை தலைவர் ராம், அறிவழகன், மாநில செயற்குழு உறுப்பினர் சிவகுமார், உழவர் பேரியக்க முத்துசாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், தம்பிதுரை கார்த்திக், வெங்கட்ராமன், முருகேசன், கணேசன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post ஆணைமடுவு அணை கட்டும் திட்டம் சேர்வராயன் மலையடிவாரத்தில் அதிகாரிகள் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: