கல்வான் தாக்குதலில் வீர மரணமடைந்த வீரரின் மனைவி ராணுவ அதிகாரியானார்: மேலும் 5 பெண் வீரர்கள் நியமனம்

புதுடெல்லி: கல்வான் தாக்குதலில் வீரமரணமடைந்த நாயக் தீபக் சிங்கின் மனைவி ராணுவத்தில் லெப்டினன்ட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேசம் ரேவா மாவட்டம் ஃபரண்டா கிராமத்தை சேர்ந்தவர் நாயக் தீபக் சிங் கஹர்வார். இவர், கடந்த 2020 ஜுன் 15ம் தேதி லடாக்கின் கிழக்கு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினருடன் நடந்த மோதலில் வீர மரணமடைந்தார். 8 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்த நாயக் தீபக் சிங், இறப்பதற்கு ஒரு வருடத்துக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டார். கார் ரெஜிமண்டின் 16வது பட்டாலியன் பிரிவை சேர்ந்த நாயக் தீபக் சிங்கின் வீரத்தை பாராட்டி, இறப்புக்கு பின் அவருக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அதனை தீபக் சிங்கின் மனைவி ரேகா தேவி பெற்று கொண்டார். ஆசிரியையாக பணியாற்றி வந்த ரேகா தேவிக்கு கணவரை போன்றே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக சேவை செய்யும் உயரிய எண்ணம் தோன்றியது. அதனை செயல்படுத்தும் விதமாக, ராணுவத்தில் சேருவதற்கான ஆளுமை மற்றும் நுண்ணறிவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற ரேகா தேவி, தொடர்ந்து சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையம்(ஓடிஏ)வில் சேர்ந்து 9 மாதங்கள் பயிற்சியை நேற்று நிறைவு செய்தார். இந்நிலையில், ரேகா தேவி லெப்டினன்ட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் லடாக்கிலுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவருடன் வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக இந்திய ராணுவத்தின் பீரங்கி படையில் 5 பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். லெப்டினன்ட் மைஹக் சைனி, லெப்டினன்ட் சாஷி துபே, லெப்டினன்ட் அதிதி யாதவ், லெப்டினன்ட் பயஸ் முட்கில், லெப்டினன்ட் அகன்ஷா ஆகியோர் சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சிகளை நிறைவு செய்தனர். இதையடுத்து 3 பேர் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியிலும், மற்ற 2 பேர் பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

The post கல்வான் தாக்குதலில் வீர மரணமடைந்த வீரரின் மனைவி ராணுவ அதிகாரியானார்: மேலும் 5 பெண் வீரர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: