தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை உண்மைக்கு புறம்பாக இபிஎஸ் அறிக்கை வெளியீடு: அமைச்சர் செந்தில்பாலாஜி டிவிட்

சென்னை: தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை செய்யும் விவகாரத்தில் உண்மைக்கு புறம்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். சென்னை கோயம்பேடு அருகே உள்ள தனியார் மாலில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் சமீபத்தில் நிறுவப்பட்டது. சில்லறை விற்பனைக்கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களை தடுக்கும் தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், நான்கு மதுபான சில்லரை விற்பனை கடைகளில் மட்டுமே, கடைகளுக்கு உள்ளேயே இந்த இந்திரம் நிறுவனப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் அறிக்கை விளக்கமளித்திருந்தது.

இந்தநிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ‘‘சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் டாஸ்மாக் கடைக்கு தானியங்கி மது விற்பனை மையம், அதாவது இயந்திரம் மூலம் மது வகைகளை விற்பனை செய்வதற்கான தானியங்கி இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல, தமிழகம் முழுவதும் 500 இடங்களில் இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாக செய்தி வந்துள்ளது’’ என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் செந்தில்பாலாஜி டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: கோயம்பேட்டில் ஏற்கனவே செயல்பட்டுவரும் வணிக வளாக சில்லரை விற்பனை கடைகளுக்கு தான் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கிறதென தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் தெளிவான குறிப்பை வெளியிட்ட பிறகும், ‘‘உள்ளேன் அய்யா’’ என இருப்பை காட்டிக்கொள்ள, உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பழனிசாமி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

The post தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை உண்மைக்கு புறம்பாக இபிஎஸ் அறிக்கை வெளியீடு: அமைச்சர் செந்தில்பாலாஜி டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: