அஜித் பவார் கருத்து தெரிவித்திருந்த நிலையில் மகாராஷ்டிரா முதல்வராக எனக்கும் தான் ஆசை: ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தடாலடி

மும்பை: மகாராஷ்டிரா மாநில முதல்வராக எனக்கும் ஆசை இருப்பதாக ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார். மகாராஷ்டிராவின் முதல்வர் பதவிக்கு பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ‘மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக எனக்கும் ஆசை இருக்கிறது. அதற்கு நானும் தயாராக உள்ளேன்’ என்றார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சேர வேண்டும். அவர் எங்களுக்கு அரசியல் கற்றுக் கொடுத்தவர் ஆவார். ஒன்றிய முன்னாள் அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், நிதிஷ் குமார் போன்ற மாறுபட்ட சித்தாந்தங்களைக் கொண்டவர்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வந்தனர்.

எனவே, சரத் பவாரும் எங்களது கூட்டணியில் இணைய வேண்டும். மகாராஷ்டிரா முதல்வர் பதவிக்கு எல்லோரும் போட்டியிடுகிறார்கள், அவர்களில் யாருக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறதோ அவர்கள் தான் முதல்வராக முடியும். எனவே நானும் முதல்வராக விரும்புகிறேன். தற்போது எங்களது கூட்டணி அரசு நிலையான ஆட்சியை நடத்தி வருகிறது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சிறப்பாக செயல்படுகிறார்’ என்றார். கடந்த சில நாட்களுக்கு முன் சரத்பவாரின் உறவினரான அஜித் பவார், தான் மகாராஷ்டிராவின் முதல்வராக விரும்புவதாக கூறியிருந்தார். அதையடுத்து அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவும் தானும் முதல்வராக விருப்பம் தெரிவித்துள்ளார்.

The post அஜித் பவார் கருத்து தெரிவித்திருந்த நிலையில் மகாராஷ்டிரா முதல்வராக எனக்கும் தான் ஆசை: ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தடாலடி appeared first on Dinakaran.

Related Stories: