தேனிக்காரர் கூட்டத்தில் பங்கேற்ற மாஜி அமைச்சரின் ஆதரவாளர்களை பற்றி ரகசிய விசாரணை நடத்தும் சேலம் டீம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தேனிக்காரரின் கூட்டத்தில் பங்கேற்ற மாஜி அமைச்சரின் ஆதரவாளர்களை பற்றி ரகசிய விசாரணையில் சேலத்துக்காரர் டீம் இறங்கியிருப்பதாக சொல்கிறார்களே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைகட்சியில் தேனிக்காரரின் அணி சார்பில் தமிழகத்தின் மையப்பகுதியான மலைக்கோட்டை மாநகரில் மாநாடு நடந்தது. சேலத்துக்காரருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மலைக்கோட்டை மாநகர் உட்பட டெல்டா மாவட்டம் முழுவதும் இருந்து அவரது அணியில் உள்ள அதிருப்தி நிர்வாகிகள், தொண்டர்களை அழைத்து வரவேண்டும் என நெற்களஞ்சிய மாவட்ட மாஜி அமைச்சர் வைத்தியானவருக்கு தேனிக்காரர் அதிரடியாக உத்தரவு போட்டு இருந்தார். இதற்காக மாஸ்டர் பிளான் போட்டு அவரிடம் கொடுக்கப்பட்டது. இதற்கான முயற்சியில் டெல்டா மாவட்டம் முழுவதும் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தேனிக்காரரின் டீம் களத்தில் இருந்தது. இதற்காக ஒவ்வொருவருக்கும் குவார்ட்டருடன் ‘வைட்டமின் ப’ பேசி முடிக்கப்பட்டதாம். கடலோர மாவட்டத்தில் இருந்து சேலத்துக்காரரின் அதிருப்தி நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமல்லாமல் மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ ஆதரவாளர்கள் கூட அவருக்கு தெரியாமல் மாநாட்டில் பங்கேற்றார்கள். ‘மணியானவருக்கு’ வேண்டாத முக்கிய நிர்வாகிகள் இந்த தகவலை ரகசியமாக சேலத்துக்காரரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்கள். இதனால் ‘மணியானவர்’ மீது சேலத்துக்காரர் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார். தேனிக்காரரின் கூட்டத்திற்கு சென்றவர்கள் யார் யார் என்பது குறித்து சேலத்துக்காரர் டீம் ரகசிய விசாரணையில் இறங்கியுள்ளது. ‘மணியானவரையும்’ நேரில் அழைத்து விசாரிக்க சேலத்துக்காரர் முடிவு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்குள்ளான மணியானவர், கூட இருந்தே குழிபறித்து விட்டார்களே என நெருக்கமானவரிடம் புலம்பி வருகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை ஆட்சியில் கட்டியது எல்லாம் ஆடிப்போய் கிடக்காமே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘கடந்த இலைக்கட்சி ஆட்சி காலத்தில் ஏனோ தானோவென அவசர கோலத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வகையில் மெடல் மாவட்டத்தின் பால்கோவா நகர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும், வருவாய் கருதி அரசு கட்டிடங்கள் அவசர அவசரமாகக் கட்டி திறக்கப்பட்டன. பல லட்சங்களை விழுங்கிய இக்கட்டிடங்கள் எல்லாம் இப்போது, பல்லிளித்து பரிதாபமாக காட்சியளிக்கின்றன. மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இலைக்கட்சி காலத்தில், இக்கட்சியின் நிர்வாகிகள் பல்வேறு அரசுக்கு சொந்தமான கட்டிடங்களை கான்ட்ராக்ட் எடுத்து கட்டியுள்ளனர். இப்படி பல லட்சங்களில் அரசு பயன்பாட்டுக்கு கட்டப்பட்ட இவற்றை அப்போது முதல்வராக இருந்த சேலத்துக்காரர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இக்கட்டிடங்கள் தற்போது பெயர்ந்து, இடிந்து போய் சில ஆண்டுகளிலேயே இக்கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு படு பரிதாபமாக மாறிப்போயிருக்கின்றன. மக்கள் பணத்தை வீணடித்து, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய இலைக்கட்சியினர் மீது நடவடிக்கை கோரி பால்கோவா நகரத்து சமூக ஆர்வலர்கள் பலரும், இந்த சேதமுற்ற கட்டிடங்களை கணக்கெடுத்து, கட்டிடங்களை கட்டிய காலம், செலவுத்தொகை, இதன் தரம் உள்ளிட்ட பலவற்றையும் பட்டியலிட்டு மாவட்ட நிர்வாகத்துடன், லஞ்ச ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கும் படங்களுடன் அனுப்பி வைத்திருக்கின்றனர். இதன்பேரில் விரைவில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறதாம். இது இலைக்கட்சி நிர்வாகிகள், அவர்களுக்கு துணைபோன அதிகாரிகள் வயிற்றில் புளியை கரைத்து வருகிறது…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தனிக்காட்டு ராஜாவா செயல்படுறாராமே தனிப்பிரிவு காக்கி…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டம் அணையான வட்டத்துல காக்கிகள் நிலையம் இருக்குது. இந்த நிலையத்துல ஐங்கரன் பெயரைக்கொண்டவர் தனிப்பிரிவு டீம்ல இருக்காராம். அணையான காக்கிகள் நிலையத்துல தனியாக 3 ஸ்டார் காக்கி பணியிடம் இல்லையாம். பள்ளி கொண்ட ஏரியா ஸ்டார் காக்கிதான் பொறுப்பு வகித்து வர்றாராம். இதனால அந்த ஏரியாவுல இருக்குற ஐங்கரன் பெயரை கொண்ட தனிப்பிரிவு காக்கி தனிக்காட்டு ராஜாவாக செயல்படுறாராம். அந்த ஏரியாவுல சரக்கு, மண் கடத்தல்னு எல்லாம் நடக்குதாம். இவர் தான் எல்லாத்தையும் முன்ன நின்னு பேசி முடிக்கிறாராம். ஸ்டேஷன் லிமிட்ல ஏதாவது நடந்தாலும் மாவட்ட காக்கிக்கு தகவல் தெரிவிக்கிறது இல்லையாம். இவருக்கு அணையான வட்டம் தான் சொந்த ஊராம் அதே ஏரியாவுல பலரிடம் பழக்கத்தை ஏற்படுத்திக்கிட்டு தனிக்காட்டு ராஜாவாக வலம் வர்றாராம். இதனாலேயே நேர்மையாக பணியாற்ற நினைக்கும் காக்கிகள் அந்த நிலையத்துக்கு வந்த சில மாசத்துலயே டிரான்ஸ்பர் கேட்டு வாங்கிக்கிட்டு போய்டுறாங்களாம். மாவட்ட உயர் காக்கிகள் நடவடிக்ைக எடுக்கணும்னு காக்கிகள் வட்டாரத்துல இருந்து கோரிக்கை எழுந்திருக்குதாம்’’ என்றார் விக்கியானந்தா.

The post தேனிக்காரர் கூட்டத்தில் பங்கேற்ற மாஜி அமைச்சரின் ஆதரவாளர்களை பற்றி ரகசிய விசாரணை நடத்தும் சேலம் டீம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: