சென்னை விழா-2023: சர்வதேச கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுத் திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்படும் அரங்கங்களை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை: சென்னை விழா – 2023 – சர்வதேச கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்படும் அரங்கங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக சென்னை விழா மற்றும் மருத்துவ சுற்றுலா மாநாடு குறித்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி வாலாஜா சாலை சுற்றுலா மாளிகையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர், மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர், சந்தரமோகன், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, ஆகியோர் முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

“முதலமைச்சர் தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக உருவாக்கி வருகின்றார்கள். அனைத்து துறைகளின் மூலமாகவும் பொதுமக்களுக்கு பல்வேறு உதவித் திட்டங்களையும், அடிப்படை வசதிகளையும் செய்து வருகின்றார்.

சுற்றுலாத்துறையிலும் முன்னோடி மாநிலமாக முதலமைச்சர் உருவாக்கி வருகின்றார். ஆண்டு முழுவதும் பணியாற்றி வரும் பொதுமக்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது சுற்றுலா செல்ல ஆர்வம் கொள்கின்றார். அவ்வாறு சுற்றுலா செல்லும் பொதுமக்கள் ஓய்வெடுக்கவும், பயணம் செய்யவும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தங்கும் விடுதிகள், உணவகங்கள், சுற்றுலா பேருந்து வசதிகள், சுற்றுலாதலங்களில் சாகச சுற்றுலா வசதிகள், படகு குழாம்கள். இயற்கை காட்சிகளை தொலைநோக்கி மூலமாக பார்வையிட வசதிகளை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தி வருகின்றது.

அதனடிப்படையில் சென்ற ஆண்டில் சட்டசபையில் அறிவித்தபடி சென்னை விழா இந்த ஆண்டு முதல் நடத்தப்படுகின்றது. நாளை 28.04.2023 அன்று நமது விளையாட்டுத்துறை அமைச்சரால் திறந்து வைக்க பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

நாளை தொடங்கும் சென்னை விழா மே மாதம் 14 ந்தேதி வரை நடைபெறும். இந்த திருவிழாவில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான கைத்தறி துணிகள், பாரம்பரியமாக கலைப்படைப்புகளை உருவாக்கி வரும் கலைஞர்களின் கைவினைப் பொருட்கள், உணவு வகைகள் அரங்கங்களில் இடம் பெற்று இருக்கும். இவர்களின் படைப்புகள், தயாரிப்புகள் மக்களை சென்றடைய இந்த விழா நடத்தப்படுகிறது.

இந்த சென்னை விழாவில் 10 வெளிநாடுகளைச் சேர்ந்த கலைப்பொருட்கள் 30 அரங்கங்களில் இடம் பெறுகின்றன. 20 வெளிமாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள், நெசவாளர்களின் படைப்புகள் 83 அரங்கங்களில் இடம் பெற உள்ளன.

தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்த நெசவு துணிவகைகள், பட்டு சேலைகள், கோ – ஆப் டெக்ஸ் துணி வகைகள், பூம்புகார் கைவினைப் பொருட்கள் 70 அரங்கங்களில் இடம் பெற உள்ளன. எதிர்பார்த்ததை விட அதிகமாக மொத்தம் 311 அரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த கண்காட்சியால் சென்னை பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் கைவினை கலைஞர்களின் படைப்புகள், முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ள வழிவகுக்கும்.

தீவுத்திடலில் 70 நாட்கள் நடைபெற்ற சுற்றுலா பொருட்காட்சிக்கு 15 லட்சம் எண்ணிக்கையில் பொதுமக்கள் வருகை தந்தனர். அதே போன்று இந்த சென்னை விழாவிற்கும் அதிக அளவில் பொதுமக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

தொடர்ந்து நாளை மறுநாள் 29.04.2023 அன்று ஐ.டி.சி கிராண்ட் சோழா ஓட்டலில் மருத்துவ சுற்றுலா மாநாடு நடைபெற உள்ளது. சட்டசபையில் சுற்றுலாத்துறையின் அறிவிப்புகளில் மருத்துவ சுற்றுலா மாநாடு சென்னையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

உலக அளவில் மருத்துவத்துறையில் முதன்மையான இடத்தினை தமிழ்நாடு பெறும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். தமிழ்நாட்டில் சிறந்த மருத்துவ வசதிகள் குறைந்த செலவில் கிடைப்பதால் வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சை, பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வருகின்றார்கள்.

பங்களாதேஷ், நேபாளம், சவுதி அரேபியா, ஒமான், மியாமர், ஶ்ரீலங்கா, மொரிசியஸ், மாலத்தீவுகள், வியட்நாம் மற்றும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் என 20 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மாநாட்டிற்கு வர உள்ளனர்.

தற்போது வெளிநாடுகளில் இருந்து சிகிச்சை பெற வருகை தரும் நோயாளிகளுக்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லாத நிலையில் மருத்துவ சுற்றுலா மூலம் அவர்கள் எளிதில் தங்களுக்கு தேவையான சிகிச்கைகளை குறித்த செலவில் மேற்கொள்ள வழிகாட்டுதல்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகின்றது. இது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்கள் மூலமாக வெளிநாட்டு நோயாளிகளுக்கு தெரிவிக்கப்படும்.

மருத்துவ சுற்றுலா மூலமாக மருத்துவத்துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும். சுற்றுலாத்துறையின் வளர்ச்சி ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காக உள்ளது. சுற்றுலாத்துறை மேற்கொள்ளும் கண்காட்சி, மருத்துவ சுற்றுலா மாநாடு ஆகியவை ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பையும், தனிமனித பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.

இன்று முதலியார்குப்பம் படகுகுழாமில் உள்ள உணவகத்திற்கு சென்றபோது உணவிற்கான ஆர்டர் சமூக வலைதளங்கள் மூலமாக சுற்றுலா பயணிகளால் முன்னரே தெரிவிக்கப்பட்டு உணவு தயாரிக்கப்படுவதை தெரிந்து கொள்ள முடிந்தது.

சென்ற ஆண்டு தமிழ்நாட்டிற்கு 11 கோடியே 90 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்த நிலையில் இந்த ஆண்டு 22 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் கோவில்கள் உள்ளன. இதனால் ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றார்கள். 1000 ஆம் ஆண்டிற்கு முன் மிகச் சிறப்பாக கட்டப்பட்ட கோவில்களின் கட்டட கலையை, நுட்பமான சிலைகளை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம் அமைக்கும் பணிகள் சென்ற மாதம் தொடங்கி வைக்கப்பட்டு தற்போது விரைந்து நடைபெற்று இன்னும் 2 மாதத்தில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதேபோன்று ஊட்டி, கொடைக்கானல், கோவையிலும் மிதக்கும் உணவகம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். பலூன் திருவிழா பொள்ளாச்சியில் நடைபெற்றது. மேலும் ஹெலிகாப்டர் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து ஊட்டியில் பலூன் திருவிழாவும், ஹெலிகாப்டர் பயணம் செய்து இயற்கையை ரசிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

ஊட்டியில் தற்போது அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டுள்ளார்கள். ஒரு சுற்றுலா பயணி மூலமாக குறைந்த பட்சம் 3,000 முதல் 10,000 வரை செலவு செய்யப்படுகின்றது. இதன் காரணமாக நீலகிரி மாவட்ட மக்களின் பொருளாதாரம் உயர்கின்றது. சென்ற முறை ஊட்டிக்கு 22 லட்சம் பேர் வந்தனர். இதேபோன்று மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரமாக சுற்றுலா உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு பணிகள் சுற்றுலா தலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருப்பதி சுற்றுலாவிற்கு தினசரி 300 முதல் 400 சுற்றுலா பயணிகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து சென்று வருகின்றனர். ஒரே நாளில் சென்று தரிசனம் முடித்து அன்று இரவே திரும்ப முடிவதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்கிறார்கள். உணவு உள்பட வால்வோ பேருந்தில் பயணம் மேற்கொள்ள 2,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் அதிகம் வருவதால் மேலும் கூடுதலாக 2 வால்வோ சொகுசு பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு சுற்றுலாத்துறை மானியக்கோரிக்கையின்போது சட்டசபையில் அறிவிக்கப்பட்டது”
இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

The post சென்னை விழா-2023: சர்வதேச கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுத் திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்படும் அரங்கங்களை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். appeared first on Dinakaran.

Related Stories: