திருப்பதியில் உள்ள பர்ட் மருத்துவமனையில் புதிய மருத்துவ சாதனங்கள் தயாரிக்க ஆய்வகம் அமைக்கப்படும்

*மருத்துவ அறிவியல் தேசிய தேர்வு வாரியம் நிர்வாக இயக்குனர் தகவல்

திருமலை : திருப்பதியில் உள்ள பர்ட் மருத்துவமனையில் புதிய மருத்துவ சாதனங்களை தயாரிப்பதற்கான ஆய்வகம் அமைக்கப்படும் என்றும், உபகரணங்கள் தயார் செய்ய மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று மருத்துவ அறிவியல் தேசிய தேர்வு வாரியம் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும் திருப்பதியில் உள்ள சுவிம்ஸ், பர்ட் மற்றும் ஸ்ரீ பத்மாவதி இருதயாலயா மருத்துவமனைகளுக்கு பிரபல குழந்தை அறுவை சிகிச்சை நிபுணரும், மருத்துவ அறிவியல் தேசிய மருத்துவத் தேர்வு வாரியத்தின் நிர்வாக இயக்குநருமான டாக்டர் மினு பாஜ் பாய் நேற்று வந்தார்.

அப்போது தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாவுடன் இணைந்து பத்மாவதி குழந்தைகள் மருத்துவமனை மற்றும் பர்ட் மருத்துவமனையை பார்வையிட்டார். அப்போது இருதாலயா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஸ்ரீநாத் தலைமையில், டாக்டர் பாஜ் பாய்க்கு பல்வேறு வார்டுகளில் உள்ள குழந்தைகள், இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள், கேத் லேப், ஐசியூ மற்றும் பிற மையங்களில் குழந்தைகளுக்கு சுகிச்சை அளிக்கப்படுவதை பார்வையிட்டு குழந்தைகளின் பெற்றோரிடம் பேசினார்.

அதன்பின், பர்ட் மருத்துவமனையின் சிறப்பு அலுவலர் டாக்டர் ரெட்டப்பா ஏழைகளுக்கு இலவசமாக முழங்கால் மூட்டு மாற்று மற்றும் எலும்பு முறிவு தொடர்பான நோய்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர் பாஜ் பாயிடம் விளக்கினார். அதன்பிறகு, டாக்டர் பாஜ் பாய் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தேவஸ்தான மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சைகள், முழங்கால் மற்றும் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், மிகவும் சிக்கலான முதுகெலும்பு அறுவை சிகிச்சைகள் வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் இருதய மருத்துவமனை மற்றும் பர்ட் மருத்துவமனை ஆகியவை அதிநவீன வசதிகள் மற்றும் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டுள்ளனர். பத்மாவதி மருத்துவமனையில் இதுவரை 1300 இதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் இருந்தும், அண்டை நாடுகளில் இருந்தும் சிறு குழந்தைகளின் பெற்றோர்கள் இங்கு வந்து இதய அறுவை சிகிச்சை பெறுவது பெரிய விஷயம்.

தேசிய தேர்வு வாரியத்தின் கீழ் நாடு முழுவதும் மருத்துவத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை கண்காணிப்போம். தமது குழுவின் கீழ் நிபுணர்கள் தயார்படுத்தப்பட்டு வருவதாகவும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தகுதியானவர்களுக்கு பெல்லோஷிப்கள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா. கடந்த ஆண்டு 14 பெல்லோஷிப்கள் வழங்கினார்.

இந்த ஆண்டு மே மாதத்தில் மேலும் பெல்லோஷிப்கள் வழங்கப்படும். செயற்கை நுண்ணறிவு மற்றும் பணி கற்றல் குறித்து மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். புற்றுநோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் லீனியர் ஆக்சிலரேட்டருக்கு ₹50 கோடி செலவாகும். நம் நாட்டில் நூற்றுக்கணக்கில் தேவை இத்தகைய விலை உயர்ந்த மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கு நமது மருத்துவர்களுக்கு பயிற்சி திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும். பர்ட் மருத்துவமனையில் அதிநவீன வசதிகள் உள்ளது. மருத்துவத் துறையில் புதிய கருவிகள் தயாரிப்பதற்காக பர்ட் சிறப்பு ஆய்வகம் அமைக்கப்படும்.

இதற்காக நாட்டின் 5 முன்னணி ஐஐடிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இதில் செயல் அதிகாரி தர்மா மற்றும் இணை செயல் அதிகாரி சதா பார்கவி, இ.இ.ஸ்ரீகிருஷ்ணா, இருதாலயா டாக்டர் கணபதி, பர்ட் டாக்டர்கள் டாக்டர்.ராமூர்த்தி, டாக்டர்.பிரதீப், டாக்டர்.வேணுகோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post திருப்பதியில் உள்ள பர்ட் மருத்துவமனையில் புதிய மருத்துவ சாதனங்கள் தயாரிக்க ஆய்வகம் அமைக்கப்படும் appeared first on Dinakaran.

Related Stories: