நலிவடையும் நார் கட்டில் தொழில்

 

தூத்துக்குடி, ஏப். 27: நலிவடைந்து வரும் நார் கட்டில் தொழிலை பாதுகாக்க பிற கைவினை பொருட்களை போன்று முக்கியத்துவம் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பனை மரத்தின் நார்களால் கட்டப்படும் கட்டிலுக்கு தனி மவுசு உண்டு. முன்பெல்லாம் உடலுக்கு உஷ்ணத்தை கூட்டாமல் இதமான உறக்கத்தை அள்ளித்தரும் நார் கட்டில், இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை இருந்தது. நார் கட்டிலில் ஏதேனும் சிறு பழுது ஏற்பட்டாலும், உடனடியாக வேறு நார் கொண்டு அதனை சரி செய்ய முடியும். இதனால் நார் கட்டில் நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டதாக இருந்தது. காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப ஒவ்வொரு வீட்டிலும் இரும்பு கட்டிலும், மெத்தையும் இடம் பிடித்துக் கொண்டதால், நார் கட்டில்கள் மூலைக்கு தள்ளப்பட்டு விட்டன. இதனால் நார் கட்டில் தொழிலும் நலிவடைந்து வருகிறது.
பனை நார் கட்டில் செய்வதற்கு மூலப்பொருட்களான பனை மரத்து நார், 4 சட்டங்கள், 4 கால்கள் எல்லாமே பனை மரத்தில் தான் தயாரிக்கப்பட்டு வந்தது. அப்போது ஒரு கட்டில் 100 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று இதற்கு தேவையான மூலப்பொருட்கள் எதுவுமே கிடைப்பது இல்லை. வேலைக்கு ஆட்களும் அரிதாகி விட்டது. தற்போது முழுக்க முழுக்க 4 பனை மரக்கால், 4 பனை மரச்சட்டம் மற்றும் பனை நார் ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படும் கட்டில் ஒன்றின் விலை ரூ.9 ஆயிரம் ஆகிறது. நார் கட்டில்கள் வாத பிரச்னைகள் வராமல் தடுக்கும். வயது முதிர்ச்சி அடைந்தோர் நார் கட்டிலில் படுத்து தூங்கினால் முதுகில் புண்கள் ஏதும் ஏற்படாது என்று நம்பப்படுகிறது.

இவ்வாறு பல்வேறு மருத்துவ குணம் கொண்ட இயற்கையான முறையில் தயாரான நார் கட்டில்கள் நாளுக்குநாள் அழிவையே சந்தித்து வருகின்றன. இன்னும் சில ஆண்டுகள் கடந்தால் நார் கட்டில் என்றால் என்ன என்பது கூட தெரியாமல் போய்விடும். இது காட்சிப்பொருளாகி கண்காட்சியில் பார்வைப் பொருளாக மாறிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால் நார் கட்டில்களை அழிவில் இருந்து தடுக்க அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி டூவிபுரத்தில் நார் கட்டில் தயாரித்து வரும் மாற்றுத்திறனாளி இளைஞர் இசக்கிராஜா(32) கூறுகையில், ‘எனது குடும்பத்தில் 3வது தலைமுறையாக நார் கட்டில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். தற்போது கட்டில் தயாரிக்க பயன்படும் நார்கள் தென்காசி, உடன்குடி பகுதிகளில் இருந்து மட்டும்தான் வருகிறது. இதில் நார்கள் ஒரு கட்டு 1900 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த ஒரு கட்டு மூலம் 2 சிறிய கட்டில்கள் வரை பின்னலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வருடத்திற்கு 25 முதல் 30 நார் கட்டில்கள் வரை தயாரித்து விற்பனை செய்து வந்தோம். ஆனால் தற்போது 3 மாதத்திற்கு ஒரு நார் கட்டில் தான் விற்பனையாகிறது. இந்த தொழிலில் மாவட்டம் முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தாலும் நலிவடைந்த நிலையிலேயே உள்ளனர். எனவே அரசு பிற கைவினை பொருட்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை நார் கட்டில்களுக்கும் அளித்து நார் கட்டில் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

The post நலிவடையும் நார் கட்டில் தொழில் appeared first on Dinakaran.

Related Stories: