பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கிருஷ்ணகிரி :  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதன் எதிரொலியாக கிருஷ்ணகிரி அணை பூங்காவில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தமிழகத்தில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருவதால் குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் இயற்கை வளம் மிக்க பகுதிகளுக்கும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி போன்ற மலைப்பிரதேசங்களுக்கும் சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் 40 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே காத்திருந்த மாணவ, மாணவிகள் தற்போது சுற்றுலாத் தலங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிக முக்கிய சுற்றுலா தலமான கிருஷ்ணகிரி அணை பூங்கா, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, படகு இல்லம் ஆகிய இடங்களில் தற்போது சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில் அதிகளவில் கூட்டம் இருந்தது. கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, அண்டைய மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

அவ்வாறு வந்த சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளை பூங்காவில் உள்ள சறுக்கு பலகை, ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களை அமர வைத்தும், அவர்கள் அமர்ந்தும் விளையாடி மகிழ்ந்தனர். அத்துடன் வயதானவர்கள் பூங்காவில் உள்ள மர நிழல்களில் உள்ள புல்தரையில் படுத்து பொழுதை போக்கினர். பல பேர் தங்கள் வீடுகளில் சமைத்து எடுத்து வந்திருந்த உணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். அத்துடன் கிருஷ்ணகிரி அணையின் மேற்புறம் உள்ள மீன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. இதனால், மீன் விற்பனையும் சூடுபிடித்தது. எஸ்.பி. மகேஷ்குமார் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி டேம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி மேற்பார்வையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: