அன்னூர், ஏப்.24: அன்னூர் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளி காற்றில் சேதமடைந்த வாழை தோட்டங்களில் கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டத்தில், அன்னூர் வட்டாரத்தில் பொகலூர், குப்பனூர், வடக்கலூர், ஒட்டர்பாளையம் ஊராட்சிகளில் கடந்த 21ம் தேதி மாலை வீசிய சூறாவளி காற்று மற்றும் சுழன்று, சுழன்று அடித்த காற்றால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து நாசமானது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தோட்டங்களுக்கு சென்று கள ஆய்வு செய்து, கணக்கெடுப்பு நடத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், அன்னூர் தாசில்தார் காந்திமதி, ஆகியோர் பொகலூர் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது விவசாயிகள், கலெக்டரிடம் விரைவில் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், காட்டு பன்றிகள், மயில்கள் தொல்லையால் இங்கு எந்த பயிரும் செய்ய முடியாத நிலை உள்ளது என்றனர். அப்போது கலெக்டர் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் வாழைகள் காற்றால் பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என கேட்டார். வாழைகளுக்கு இரண்டு புறமும் மூங்கில் கம்பங்களால் முட்டுக்கொடுத்தால் வாழைகள் சாயாது என உதவி இயக்குனர் மதுபாலா தெரிவித்தார். அப்போது விவசாயிகள் இது சாத்தியமில்லை பல்லாயிரம் ரூபாய் செலவாகும் என்றனர். விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அப்போது ஊராட்சி தலைவர் நடராஜன், துணை தாசில்தார் நாட்ராயன், கிராம நிர்வாக அலுவலர் ஜெயபாரதி உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
The post அன்னூர் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளி காற்றில் சேதமடைந்த வாழை தோட்டங்களில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.
