வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து விழுப்புரத்தில் 26ம் தேதி முதல்வர் ஆய்வு

சென்னை: வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வரும் 26ம் தேதி விழுப்புரத்துக்கு 2 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 26ம் தேதி நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். மேலும், இம்மாவட்டங்களில் சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் அன்றைய தினமே ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். இதன்பிறகு, விவசாயிகள் மற்றும் மாணவ- மாணவியர்களுடன் நடைபெறும் கலந்துரையாடலில் முதல்வர் பங்கேற்கிறார்.

இதனையடுத்து, விழுப்புரம் சுற்றுலா மாளிகையில் தங்கும் முதல்வர், அடுத்தநாள் 27ம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மூன்று மாவட்ட முக்கிய அதிகாரிகளுடன் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார். இக்கூட்டத்தில், மக்களின் தேவைகள், வேளாண்மை ஊரக வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி, வாழ்வாதார மேம்பாடு சுகாதாரம், சமூக நலன் இளைஞர் நலன் ஆகிய அடிப்படை உட்கட்டமைப்புகள் தொடர்பான திட்டப்பணிகள் குறித்தும் முதல்வர் அதிகாரிகளுடன் விவாதிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து விழுப்புரத்தில் 26ம் தேதி முதல்வர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: