போதிய மழையின்றி பாதிக்கப்பட்ட நெல், மிளகாய் பயிர்களுக்கு வறட்சி நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும்: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

 

ராமநாதபுரம், ஏப். 22: ராமநாதபுரத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் போதிய மழையின்றி பாதிக்கப்பட்ட நெல், மிளகாய் பயிர்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை வகித்தார். வேளாண்மை துறை நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி வரவேற்றார். கூட்டத்தில் மாவட்டம் மற்றும் தாலுகா அளவிலான விவசாயிகள் சங்க நிர்வாகிகள், பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர். இதில் வைகை பாசன சங்க தலைவர் பாக்கியநாதன் கூறும்போது, கடந்தாண்டு போதிய பருவமழையின்றி வறட்சியால் பாதிக்கப்பட்ட நெல், மிளகாய் பயிர்களுக்கு அரசு வறட்சி நிவாரணம் தொகையாக ஏக்கருக்கு ரூ.8000 வழங்க வேண்டும்.

அதே போல் தேசிய பயிர் காப்பீடு திட்டத்தில் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 640 பொதுப்பணித்துறை கண்மாய்களை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மராமத்து செய்யப்பட்டு வருகிறது. அதனை போன்று மாவட்டத்தில் உள்ள 1,200 ஒன்றிய கண்மாய்கள், குளங்களை மராமத்து செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டத்தில் உடனடி மின் இணைப்பு வழங்க வேண்டும். மேலும் வானிலை அறிக்கை பற்றிய செய்திகள் குறித்த சிறப்பு வேளாண்மை துறை சார்ந்த கருத்து கலந்தாய்வு கூட்டம், பி.எம் கிஸான் திட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயன்பெற சிறப்பு கூட்டம் ஆகியவற்றை நடத்த வேண்டும். சட்டப்பேரவையில் அரசு அறிவித்துள்ள கூத்தன் கால்வாய் திட்டத்தில் விடுபட்டுள்ள கடலாடி, சிக்கல், மேலச்செல்வனூர் சேர்ந்த பகுதி கண்மாய்கள் பயன்பெற சிறப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

The post போதிய மழையின்றி பாதிக்கப்பட்ட நெல், மிளகாய் பயிர்களுக்கு வறட்சி நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும்: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: