திட்டை குரு ஸ்தலத்தில் அனுமதியின்றி அன்னதானம் வழங்கினால் நடவடிக்கை

தஞ்சாவூர், ஏப்.19: தஞ்சாவூர் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில் குரு பெயர்ச்சி விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு தஞ்சாவூர் ஆர்டிஓ பழனிவேல் (பொறுப்பு) தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் தன்னார்வலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோருடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பழனிவேல் பேசியதாவது: குரு பெயர்ச்சி நாளன்று முக்கிய நிகழ்ச்சி நடைபெறும் பொழுது இதர நாட்களில் கோயிலுக்கு வருகை தரக்கூடிய பக்தர்களுக்கு தகுந்த ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்தும், குரு பெயர்ச்சி தொடர்ந்து அடுத்த 10 நாட்களுக்கு அதிக கூட்டம் வரும் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரச்சினை இயலாதவர் தகுந்த முன் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும், அதேபோல் வெயில் காலம் என்பதால் குரு பெயர்ச்சி நாட்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக்கிய இடங்களில் குடிநீர் வசதி ஏற்பாடு செய்திடவும், அதேபோல் துப்புரவு ஆய்வாளர்கள் தலைமையில் போதிய துப்புரவு பணியாளர்களை கோயிலை சுற்றி உள்ள பகுதியில் தூய்மை பணிக்காக 24 மணி நேரமும் பணியில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

தீயணைப்பு வாகனம் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனம், நடமாடும் மருத்துவர் குழு வாகனம், அதற்கு தேவையான உபகரணங்கள் முதலுதவி சிகிச்சை ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும். குரு பெயர்ச்சி நடைபெறும் நாட்களில் மின்கசிவு மற்றும் விபத்து ஏற்படாமல் இருக்க போதுமான மின் வாரிய பணியாளர்களை பணி அமர்த்த வேண்டும் அதேபோல் தடையில்லா மின்சாரம் கொடுக்கவும் சனி ஞாயிறு ஆகிய இரு தினங்களில் 24 மணி நேரமும் பேருந்து வசதிகள் பொது மக்களை கோயில் அருகிலே இறக்கி விடுவதற்கான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும்.

குரு பெயர்ச்சி விழாவிற்கு 300 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல் அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் சான்றிதழ் பெற்று உணவின் தரம் பரிசோதித்து பின் பக்தர்களுக்கு உணவு வழங்க வேண்டும். அப்படி அனுமதி இல்லாமல் யாராவது உணவுகள் வழங்கினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

அதேபோல் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது எனவும் மேலும் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறை மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்க பட வேண்டும். அது மட்டுமின்றி குரு பெயர்ச்சி விழா சிறப்பாக முடிவதற்கு அனைத்து துறை அதிகாரிகளும் 24 மணி நேரமும் பணியில் இருந்து பொதுமக்களுக்கு எந்த ஒரு தொந்தரவு இல்லாமல் பாதுகாத்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். இக்கூட்டத்திற்கு தஞ்சாவூர் தாசில்தார் சக்திவேல் வல்லம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நித்தியா, கார்த்திபன், மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

The post திட்டை குரு ஸ்தலத்தில் அனுமதியின்றி அன்னதானம் வழங்கினால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: