டீ தர மறுத்து திட்டி, தாக்கிய உரிமையாளர் வன்கொடுமை சட்டத்தில் கைது

விருத்தாசலம், ஏப். 19: விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள பள்ளிப்பட்டு சமத்துவப்புரத்தைச் சேர்ந்தவர் குப்பன்(48), நரிக்குறவர். இவர் நேற்று தன்னுடைய பேரன் சித்தார்த்(5) என்பவரை அழைத்துக் கொண்டு மங்கலம்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள தேனீர் கடைக்கு சென்று டீ குடித்து உள்ளார். அங்கு வந்த கடையின் உரிமையாளர் அண்ணாதுரை(60) என்பவர் இவர்களுக்கு எல்லாம் ஏன் டீ கொடுக்கிறீர்கள் என டீ மாஸ்டரை திட்டி விட்டு, நீ எல்லாம் இங்கு வந்து டீ குடிக்க கூடாது என கூறி குப்பனையும் திட்டியதாக தெரிகிறது. அதற்கு குப்பன் ஏன் எங்களுக்கு டீ தர மாட்டீர்கள் என கேட்டதற்கு ஆத்திரமடைந்த அண்ணாதுரை அங்கிருந்த பிளாஸ்டிக் சேரால் குப்பனை அடித்து தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த குப்பன் அருகில் இருந்த மங்கலம்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணையில் அண்ணாதுரை, குப்பனை சமூகத்தைச் சொல்லி திட்டி, தாக்கியது உறுதியானது. இதையடுத்து அண்ணாதுரை மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டீ தர மறுத்து திட்டி, தாக்கிய உரிமையாளர் வன்கொடுமை சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Related Stories: